பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை99

கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த,
வம்ப மாரியைக் காரென மதித்தே”

(குறுந். 66)

சூத்திரம் : 39 
 “பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி
 வழுவி னாகிய குற்றங் காட்டலும்
 ஊரது சார்வும் செல்லுந் தேயமும்
 ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும்
 புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு
 அழிந்தெதிர் கூறி விடுப்பினும் ஆங்கத்
 தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும்
 சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினும்
 கண்டோர் மொழிதல் கண்ட தென்ப”

கருத்து : இது, தலைமக்கள் உடன்போக்கின்கண் கண்டோர் கூற்று நிகழுமிடம் கூறுகின்றது.

பொருள் : பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றங் காட்டலும் = அவர் போகும் நேரமும் வழியும் அச்சந்தரத்தக்கவாக, அவை அஞ்சாது சென்று இடையுறு மேதங் கருதாதேகும் பிழையை அவர்கட்கு எடுத்துக் காட்டுதலும்; ஊரது சார்வும் = உடன் போவார்க்கு வழித்தங்க அண்மையில் ஊருண்மையையும்; செல்லும் தேயமும் = அவர்கள் செல்லுமிடத்தின் சேய்மையையும்; ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் = அன்பு நிறைந்த உள்ளத்தொடு தலைமக்கட்கு அவர் நலம் பேணிப்பரிந்து கூறுமிடத்தும்; புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்தெதிர் கூறி விடுப்பினும் = காதலால் கூடின தலைமக்கள்பால் அன்புற்ற உள்ளத்தோடு அவர் நிலைமைக்கு வருந்தி எதிரெடுத்துரைத்து அவரை விடுவிக்குமிடத்தும்; ஆங்கத்தாய் நிலைகண்டு தடுப்பினும் = தலைமக்களைத் தாங்கண்ட சுரத்திடையே தேடிவரும் செவிலித்தாய் நிலைமைகண்டு அவளை மேற்செல்லாது தடுத்துரைக்கு மிடத்தும்; விடுப்பினும் = நீ மேற்செல்லின் தலைமக்களைக் காண்பை எனக்கூறி