(து - ம்.) என்பது, தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியைத் தோழி, "யானுங் கவலுகையில் நம் அயலகத்துமாது தான் வேறொருத்தியிடம் உரையாடும்பொழுது 'அவன் இப்பொழுதே வருகுவன்' என வாய்ச்சொற் கூறினளாதலின் அவள் அமிழ்த முண்பாளாக," வெனத் தான்பெற்ற நன்னிமித்தங் கூறித் தேற்றா நிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 9.) என்னும் நூற்பாவினுள் "பிறவும் வகைபடவந்த கிளவியெல்லாம்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| அமுதம் உண்கநம் அயலில் ஆட்டி |
| கிடங்கில் அன்ன விட்டுக்கரைக் கான்யாற்றுக் |
| கலங்கும் பாசி நீரலைக் கலாவ |
| ஒளிறுவெள் அருவி 1 யொண்டுறை மடுத்துப் |
5 | புலியொடு பொருத புண்கூர் யானை |
| நற்கோடு நயந்த அன்பில் கானவர் |
| விற்சுழிப் பட்ட நாமப் பூசல் |
| உருமிடைக் கடியிடி கரையும் |
| பெருமலை நாடனை வரூஉம்என் றோளே, |