பக்கம் எண் :


116


- வெப்பங்கொண்ட புழுதிமிக்க நெறியின் கண்ணே தன்னை விரும்பிய காதலனைக் கூடிச் சென்றனளாயினும்; கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும் காழ் பெய் அல்குல் காசு முறை திரியினும் - சூடிய பூமாலை சிக்குண்டாலும் குறிய வளை கையினின்று நழுவினாலும் காஞ்சியணிந்த அல்குலின் மேல் நாலுகின்ற பொற்காசு இனம் முறை பிறழ்ந்து கிடந்தாலும்; மாண் நலம் கையறக் கலுழும் என் மாயம் குறுமகள் மலர் ஏர் கண் - அவற்றைத் திருத்துதற்குத் தெரிந்திலளாய்த் தனது மாட்சிமைப்பட்ட அழகானது அழிந்தொழியுமாறு கலுழாநிற்கும் என் அழகிய இளம் புதல்வியின் மலர்போன்ற கண்கள்; சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல் - வெய்ய சுரத்திற் செல்லுங் கடுமையாலே சிவந்து ஒளி மழுங்கி்க் கலக்க மடைந்தனவோ ? இவ்வொன்றற்கே வருந்தா நிற்பேன்; எ - று.

     (வி - ம்.) உலறுதலை - காய்ந்த கிளை. சிதர் - வண்டு. இயவு - நெறி. காழ் - எட்டுக் கொத்துக்களையுடைய அரைப்பட்டிகை. புலம்பு கொள்புன்புறாவென இயைக்க. மாயம் - அழகு. குறுமகள்-இளமகள். மனைமருட்சி - இல்லகத்து மருண்டிருத்தல்.

     "நயந்த காதலற் புணர்ந்தன ளாயினும்" எனத் தான் அதனை அறத்தாறெனக் கருதியது கூறினாள். நெகிழினும் திரியினும் கையறக் கலுழுமென்றது மிக்க இளமைப் பருவத்தைக் குறித்தது. இவ்வளவு இளம்பருவத்தாள் ஓராடவனைப் பெற்றுச் சென்றனளென அவளறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் வியந்து மகிழ்ந்தனளாம். கண் கலங்காமற் சென்றுழி முற்றுமே மகிழ்வாளாவது,

     இறைச்சி :-புறா தின்னத்தகாத காயைத் தின்று கிளையிலேறி மறுக்கமுற்று வருந்தா நிற்றல் போல, என்மகள் ஏதிலாளனது மாயவின்பத்தினை நன்றெனக் கொண்டு சென்று பின்பு மறுக்கமுற்று வருந்தா நிற்குமோ வென்றதாம். மெய்ப்பாடு - உவகைக்கலுழ்ச்சி. பயன் - ஆற்றாமை நீங்குதல்.

     (பெரு - ரை.) இனி, இச்செய்யுளை "நயந்த காதலற் புணர்ந்தனளாயினும் என் குறுமகள் கண் புன்புறா உயவும் வெந்துகள் இயவில் சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல் என இயைத்துக்கோடல் வேண்டும்". இங்ஙனம் இயைப்பின் 'வெய்ய சுரத்தில் செல்லும் கடுமையாலே' என மிகையாக ஓர் ஏது வருவித்துக் கொள்ளல் வேண்டாமை உணர்க.

     மாயக்குறுமகள் என்றது வஞ்சமுடைய சிறுமி என்றவாறு. இஃது அவள் தன்னை வஞ்சித்தமை கருதிக் கூறியபடியாம் என்க.

     புறாத் தின்னத்தகாத காயைத் தின்று கிளையிலேறி மறுக்கமுற்று வருந்தாநிற்றல்போல என்றது இறைச்சியன்று உள்ளுறையுவமையே ஆகும். என்னை ? உவமமும் பொருளுமாகக் கொள்ளவைத்தமையான் என்க. இறைச்சி அங்ஙனம் உவமமும் பொருளுமாகக் கோடற்கியலாவகை வரும்.

(66)