(து - ம்,) என்பது, இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தோழிகேட்டு உடன்படுத்துமாறு யாம் வந்திருக்கின்றே மென்று தலைவியிடத்து ஒருவர் சென்று கூறினால் யாரோ வென்னாளாய் யாம் வந்துளே மென்று மகிழ்ந்து களிப்பால் மயங்குவள்; அங்ஙனங் கூறுவாரைப் பெற்றிலேமே யென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.)இதற்கு, "பண்பிற் பெயர்ப்பினும்" (தொல்-கள- 12) என்னும் நூற்பாவின்கண் வரும் "பரிவுற்று மெலியினும்" என்னும் விதி கொள்க.
| நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால் |
| நாருரித் தன்ன மதனின் மாமைக் |
| குவளை அன்ன ஏந்தெழில் மழைக்கண் |
| திதலை யல்குற் பெருந்தோட் குறுமகட் |
5 | கெய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, |
| இவர்யார் என்குவள் அல்லள் முணாஅ |
| தத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி |
| எறிமட மாற்கு வல்சி யாகும் |
| வல்வில் லோரி கானம் நாறி |
10 | இரும்பல் ஒலிவருங் கூந்தல் |
| பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே. |
(சொ - ள்.) நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால் நார் உரித்து அன்ன - நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; மதன் இல்மாமை - அழகு குறைந்த மாமையையும்; குவளை அன்ன ஏந்து எழில் மழைக்கண் - குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலை அல்குல் பெருந்தோள் குறுமகட்கு - திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; எய்தச் சென்று செப்புநர்ப் பெறின் - நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; இவர் யார் என்குவள்