(து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற் பிரிவதறிந்து உடம்பு வேறுபட்ட தலைவி தோழியைநோக்கி நாம் தலைவர்பாற்சென்று பிரியா திருக்கும்படி கூறி நமது காமத்தன்மையையுஞ் சொல்லுகிற்போம். அவர் பிரியின் யானிறந்துபடுவது திண்ணமாதலின் அங்ஙனஞ் சொல்லி அவர் செலவை மாற்றுவதன்றி வேறெவ்வகைச் சூழ்ச்சியாலே தடுப்பதென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.)இதனை, "அவனறிவு ஆற்ற அறியும்" (தொல்-கற்- (9.) ) என்னும் நூற்பாவின்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ |
| கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர் |
| மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் |
| ஏர்தரல் உற்ற இயக்கருங் கவலைப் |
5 | பிரிந்தோர் வந்துநப் புணரப் புணர்ந்தோர் |
| பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ |
| என்றுநாங் கூறிக் காமஞ் செப்புதுஞ் |
| செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று |
| அம்ம வாழி தோழி |
10 | யாதனின் தவிர்க்குவங் காதலர் செலவே. |
(சொ - ள்.) தோழி வாழி அம்ம - தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கை சிறை உறை நனிதிரள் நாள்வீ - ஈங்கையின்