மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரை நல் மனை குறுந் தொடி மகளிர் மணல் ஆடு கழங்கின் அறைமிசைத் தாஅம்-கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; ஏர் தரல் உற்ற இயக்கு அருங் கவலை - அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்தோர் வந்து நம் புணர - பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ என்று நாம் கூறி - எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; காமம் செப்புதும் - நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; செப்பாதுவிடின் - சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண் !; உயிரொடும் வந்தன்று - அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; காதலர் செலவு யாதனில் தவிர்க்குவம் - ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண் !; எ - று.
(வி - ம்.) உறை-தேன்றுளி. அறை - பாறை. ஏர் - அழகு. வந்தன்று : தெளிவு பற்றிய காலவழுவமைதி. பிரிந்தோர், புணர்ந்தோர் இடவழுவமைதி.
பிரிவுணர்தலும் உடம்பு வேறுபட்டதாதலிற் பிரியின் இறந்துபடுவது திண்ணமெனக் கொண்டு உயிரொடும் வந்தன்றென்றாள்.
இறைச்சி :- தேனிறைந்தமலர் கற்பாறைமிசைத் தாம் என்றது வேட்கை நிறைந்த என்னெஞ்சம் அவர்வயிற் சென்றொழிந்த தென்றதாம். மெய்ப்பாடு -அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) சிறை ஈங்கை என்றது தம் நன்மனைக்கு வேலியாக அமைந்த ஈங்கை எனக் கோடலும் கூடும். நாள்வீ என ஒட்டுக. தோழி இது பிரியத் தகுந்த பருவமன்றென்ப துணர்த்திச் செலவழுங்குவித்தபடியாம். மெல்லியல்புடைய என்னெஞ்சம் வன்மைமிக்க தலைவன்பாற் செல்கின்றது என்பாள் நாள்வீ அறைமிசைத் தாம் என்றாள்.
(79)
திணை : மருதம்.
துறை : இது, சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன் தோழி கேட்பத் தன்நெஞ்சிற்குரைத்தது.