(து - ம்,) என்பது, பாங்கியிற் கூட்டத்தின்கண்ணே குறியிடத்துத் தலைவியைக் கூடிய தலைவன் தன்னெஞ்சிற் கிடந்த கருத்தைக் கூறத்தொடங்கிக் கொடிச்சி, முருகனொடு வள்ளிநாச்சியார் சென்றது போல நீ எஞ்சிறு குடிக்கண் வந்திருக்குமாறு என்னொடு வருகின்றனையோ எனப் பரிவுற்று மெலிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பரிவுற்று மெலியினும்" (தொல்-கள- 12) என்னும் விதிகொள்க.
| நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த |
| வேய்வனப்பு உற்ற தோளை நீயே |
| என்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி |
| முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போலநின் |
5 | உருவுகண் எறிப்ப நோக்கலாற் றலனே |
| போகிய நாகப் போக்கருங் கவலைச் |
| சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல் |
| சேறாடு இரும்புறம் நீறொடு சிவண |
| வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்புஅழீஇக் |
10 | கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
| கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே. |
(சொ - ள்.) நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய் வனப்பு உற்ற தோளை நல் நடைக் கொடிச்சி-யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ !; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறுகண் பெருஞ்சின ஒருத்தல் பன்றி - சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேறு ஆடு இரும்புறம் நீறொடு சிவண - சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; வெள் வசி படீஇயர் - சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; வள்பு அழீஇ மொய்த்த கோள் நாய் கொண்ட கொள்ளை - அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் பெயர்க்கும் - கானவர் சென்று