(து - ம்,)என்பது தலைவனைப் பிரிந்து ஆற்றாளாகிய தலைவி, தோழியை நோக்கி, நீ ஆற்றுவித்தலாலே யான் ஆற்றியிருப்பேனாயினும் என்னைப் பலபடியாகப் பாராட்டி நேற்றைப்பொழுதும் இங்கிருந்த தலைவர் இன்று சுரஞ் செல்வரென்பராதலின் யான் எங்ஙனமாற்றித் தனித்திருப்பேனென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அவனறிவு ஆற்ற அறியு மாகலின்" (தொல்-கற்-6) எனவரும் நூற்பாவினுள் 'ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்' என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| கண்ணுந் தோளுந் தண்ணறுங் கதுப்பும் |
| திதலை அல்குலும் பலபா ராட்டி |
| நெருநலும் இவணர் மன்னே இன்றே |
| பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர் |
5 | மரனில் நீளிடை மான்நசை உறூஉஞ் |
| சுடுமண் தசும்பின் மத்தந் தின்ற |
| பிறவா வெண்ணெய் உருப்பிடத் தன்ன |
| உவரெழு களரி ஓமையங் காட்டு |
| வெயில்வீற் றிருந்த வெம்பல் அருஞ்சுரம் |
10 | ஏகுவர் என்ப தாமே தம்வயின் |
| இரந்தோர் மாற்றல் ஆற்றா |
| இல்லின் வாழ்க்கை வல்லா தோரே. |
(சொ - ள்.) தம் வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோர் - தம்பால் வந்திரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது நசையை ஒழித்தற்கரிய இல்வாழ்க்கையிலே பயின்றறியாத நந் தலைவர்; கண்ணுந் தோளும் தண் நறுங் கதுப்பும் திதலை அல்குலும் பலபாராட்டி-என் கண்ணையும் தோளையும் தண்ணிய நறிய கூந்தலையும் திதலை பரந்த அல்குலையும் பலபடியாகச் சிறப்பித்துக் கூறி; நெருநலும் இவணர் மன் - நேற்றைப் பொழுதிலும் இங்குள்ளவராயிருந்தார், அது கழிந்தது; இன்று பெருநீர் ஒப்பின் பேய் வெள்தேர்