மரன் இல் நீள்இடை மான் நசை உறும் - இற்றைப்பொழுது பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெளிய பேய்த்தேரை, மரங்கள் இல்லாத நீண்டவிடத்தில் மான்கூட்டம் நீரென விரும்பிச் செல்லாநிற்கும்; சுடுமண் தசும்பின் மத்தந்தின்ற உருப்பிடத்து பிறவா வெண்ணெய் அன்ன உவர் எழுகளரி - மண்ணாற் செய்து சுடப்பட்ட தயிர்த்தாழியில் மத்தாற் கலக்கப்பட்டபோது வெப்பம் மிக்குழி நன்கு திரளாது சிதறிக்கிடந்த வெண்ணெய் போன்ற உப்புப் பூத்த களரையுடைய; ஓமையங் காட்டு வெயி்ல் வீற்றிருந்த வெம்பல் அருஞ்சுரம் - ஓமை மரங்கள் நெருங்கிய காட்டகத்து வெயில் நிலைபெற்றிருந்த வெம்மையுடைய செல்லுதற்கரிய பாலையிலே; தாமே ஏகுவர் என்ப - தாம் தமியராய்ச் செல்லுவர் என உழையர் கூறாநிற்பர்; யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன், எ - று.
(வி - ம்.) உழையர் - அவாய்நிலை. மன் - கழிவு. வெம்பல் - வெம்மை. ஐ : சாரியை. இரந்தோர் . . . . .வல்லாதோரென்றது பெரிய குடியிற்றோன்றிப் பெரிய இல்வாழ்க்கையிற் பயின்றவரென்றவாறு. அத்தகையவர் புகல்புக்க என்னைக் கைவிட்டுப் பொருள் வேட்கையிற் சென்றனரேயென்றிரங்கியதாம். பிரிபவன் இனி என்று முயங்குவலென்னுங் கவர்ச்சியா0லே கண் முதலியவற்றைப் பலவாகப் பாராட்டி முழுவித் தழுவலியல்பு, அக்குறிப்பு யான் அறிந்திலேனென அவன் இங்கிருந்து பிரிவுழித் தன் கூற்றின்மையும் உழையராலறிந்தமையுங் கூறி யயர்ந்தாளாயிற்று.
இறைச்சி :- கானலை நீரெனக் கருதி மான் நசைகொள்ளுமென்றது, அருளில்லாத தலைவரை அறவரெனக்கருதி யான் மயங்கினேனென்றதாம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) சுடுமண் தசும்பின் உருப்பிடத்து மத்தந் தின்ற பிறவா வெண்ணெய் அன்ன உவர் எழுகளரி என இயைத்துக் கொள்க. இந்த உவமையின் அழகும் நுண்மையும் உணர்ந்து மகிழ்ந்திடுக. வெம்பல் - பாலைநிலம். இக்காலத்தார் வெப்பல் என்று வழங்குப. இரந்தோர் மாற்றல் என்றது தம்பால் இரந்தோரைப் பின்னும் பிறர்பாற்சென்று இரவாது மாற்றுதல் என்றவாறு, தாமே ஏகுவார் என்புழி ஏகாரம் நம்மை நீத்து எனத் தம்மைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை.
இனி, பேய்த்தேரை மான் நசையுறும் என்றது, நான் மான் போன்று அருளில்லாத பேய்த்தேர் அன்ன அவரை நசையுறுவல் மன் என உவமமும் பொருளுமாக நிற்றலின் உள்ளுறையேயாம். இறைச்சியன்றென்க. உருப்பிடந்தன்ன என்றும் பாடம்.
(84)
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைவன் வரவுணர்ந்த தோழி தலைவிக்குரைத்தது.