பக்கம் எண் :


163


வரைவு விரும்பியவாறாயிற்று. என்ன மகன் என்றது காதல் கைம்மிகல். இஃது அழிவில் கூட்டத்திற்குத் தலைக்கீடு.

    உள்ளுறை :-அலராமற் குவிந்த பூங்கொத்தையுடைய புன்னையின் கண்ணே புலவுநாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பனென்றது, புன்னையிடத்துத் தோன்றிய புலவுநாற்றத்தைப் பூவிரிந்து கெடுக்குமாறுபோல வரைந்துகொண்டு களவின்கண் வந்த குற்றம் வழிகெட வொழுகுவானாக வென்றதாம். மெய்ப்பாடு -வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - வரைவுடம்படுத்தல்.

    (பெரு - ரை.) இனி, இச்செய்யுள் நோய் அலைக் கலங்கி மதன் அழி்பொழுதில் தன் காமத்தைப் பிறர் அறியும்படி வெளிப்படுத்துக் கூறுதல் ஆடவர்க்கு ஆயின் இயல்பாகும், பெண்டிர்க்கு அங்ஙனம் நோயலைக் கலங்கி மதனழி பொழுதில் தங்காமத்தைத் தாங்களே வெளிப்படுத்துச் செப்பல் இயல்பன்மையின் யான் என் பெண்மை தடுத்தலானே காமநோயினை நுண்ணிதில் தாங்கிக் கழாப் பசுமுத்துத் தனது ஒளியைப் புறத்தே காட்டாமல் இருப்பதுபோல இருப்பேனாக; தன்வயின் ஆர்வமுடையராகி, தன்மார்பு காரணமாக வருத்தமுற்றிருக்கின்ற மகளிர் நிலையைக் குறிப்பாலே உணரமாட்டாத நம் சேர்ப்பன் என்ன மகன் ? என்று தன்வயின் உரிமையும் அவன்வயின் பரத்தைமையும் தோன்றக் கூறியதெனக் கொள்க. உரையாசிரியர் இங்ஙனம் கூறவறியாது பொருந்தாது உரை கூறுதலும் உணர்க. இது களவின்பமேகாமுற்று வரைதலிற்கருத்தின்றி ஒழுகும் தலைவனை வரைந்து கொள்ளும்படி வற்புறுத்தக் கருதிய தலைவி களவொழுக்கத்தே கூடியிருக்குங் காலத்தினுங்காட்டிற் பிரிந்துறையும் காலமே நெடிதாதலின் அது பொறாத தலைவி வரைவினை விரும்பும் தனது விருப்பத்தை நுண்ணிதின் ஓதியபடியாம் என்க. யான் என் பெண்மை தட்பத் தாங்கிப் பசுமுத்து ஏய்ப்ப அதனை அவன் அறிகின்றிலன் என்று குறை கூறியவாறென்க.

    இதன்கண் ஆர்வத்தைத் தன்கண் அடக்கியிருக்கும் தலைவி கழுவாமையினாலே தன் ஒளியைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் பசுமுத்தினைத் தனக்குவமையாக்கிக்கொண்ட நுணுக்கம் நினைத்தின்புறுக.

(")
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென வுரைத்தது.

    (து - ம்,) என்பது, பாங்கற் கூட்டத்துத் தோழன் அஃது எவ்விடத்து எவ்வியற்றென்றாற்குத் 'தலைமகன் குன்றகத்தது சீறூர், அச்சீறூர்க்கண்ணுள்ளாளொரு கொடிச்சி, அவள் கூந்தல்நறுநாற்றத்தது; அத்தகையாள் கையில் என்னெஞ்சு சிக்குண்டது; அஃது அவளன்றிப் பிறரால் விடுத்தற்கரியாதுகா'ணென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "மெய்தொட்டுப் பயிறல்" (தொல்-கள- 11) என்னும் நூற்பாவினுள் "குற்றங்காட்டிய வாயில் பெட்பினும்" என்பதன்கண் அமைத்துக்கொள்க.

  
 (பாடம்) 1. 
கோட்டம்பலவனார்.