(இ - ம்.) இதற்கு "மறைந்தவற் காண்டல்" (தொல்-கள- 20) என்னும் நூற்பாவின்கண் "ஏமஞ் சான்ற வுவகைக் கண்ணும்" என்னும் விதிகொள்க.
| நோயலைக் கலங்கிய மதனழி பொழுதின் |
| காமஞ் செப்பல் ஆண்மகற்கு அமையும் |
| யானென், பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக் |
| கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ |
5 | மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவியிணர்ப் |
| புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன் |
| என்ன மகன்கொல் தோழி தன்வயின் |
| ஆர்வ முடைய ராகி |
| மார்பணங்கு உறுநரை அறியா தோனே. |
(சொ - ள்.) தோழி நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் - தோழி ! காமநோயானது நிலைகுலைத்தலாலே கலக்கமுற்ற வலியழிந்த பொழுதில் அன்போடு வந்து அருகிலிருந்து நயமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்குரிய சிறந்த பண்பாகும், அங்ஙனம் யான் காமநோயால் வருந்திய பொழுது நம் காதலன் அருகு வந்திருந்து ஆற்றினானுமல்லன்; கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப - கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசிய முத்து தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல; யான் என் பெண்மை தட்ப நுண்ணிதில் தாங்கி - யானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கி என் பெண் தன்மையாலே தகைத்துக்கொள்ளும்படியாக; குவி இணர்ப் புன்னை புலவுநீர் அரும்பிய சேர்ப்பன் - அலராமற் குவிந்த பூங்ககொத்துக்களையுடைய புன்னையின் கண்ணே புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்தலான் மலர்ந்த கடற்கரைத் தலைவனாகிய; தன்வயின் ஆர்வமுடையராகி் மார்பு அணங்கு உறுநரை அறியாதோன் என்ன மகன் - முன்னமே அவன்பால் ஆர்வமுடையேனாக வேண்டி அவனது மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ ? எ - று.
(வி - ம்.) மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப் பெண்மை தட்பவென மாறிக் கூட்டுக. தலைவியை முத்தோடொப்பக் கூறியது சிறப்பு நிலைக்களமாக முதலொடு முதலே வந்த பண்புவமம். சேர்ப்பனாகிய அறியாதோன் என்ன மகன்கொலென மாறிக் கூட்டுக. களவாதலின் நலனைப் புலப்படாமல் மறைக்கவேண்டியதாயிற்று. ஆண்மகனருகிருந்து காமஞ்செப்புதல் கற்புக்கன்றிப் பெறப்படாமையின்,