பக்கம் எண் :


161


பழங்கண் மாமையும் உடைய-பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; தழங்கு குரல் மயிர்க்கண் முரசின் ஓரும் முன் - ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; உயிர் குறிஎதிர்ப்பை பெறல் அருங்குரைத்து - இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்; எ - று.

    (வி - ம்.) கூலம் 16. :- நெல்லு, புல்லு, வரகு, சாமை, தினை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, துவரை, கடலை, மொச்சையென்ப; சோளமும் கம்பும் சேரப்பதினெட்டெனவுமுரைப்ப; "பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக" என்றார் பிறரும். மயிர்க்கண்முரசம் - மயிர்சீவாத தோலாற்கட்டிய முரசம்.

    பணைத்தோள் - முன்பு பருத்ததோ ளென்றவாறு. தோள் நெகிழ்ச்சி நீயறியாவாறு கலன்கள் மறைப்பனவென்பாள் மருங்கு மறைத்த இழைத்தோளென்றாள். தான்கொண்ட காதலை நின்பாற் கூறுதற்கு நாண் தன்னை வருத்துதலாலே பழங்கண்கொண்டன குறுமகளாக மெனவுமாம்.

    நின்னைப் புகல்புக்கேமைக் கைவிடுகின்ற நினது மலையாயிருந்தும் பிரிந்தோரிரங்குமாறு இன்னும் இங்ஙனம் வளனுடைத்தா யிரா நின்றது; இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது காண்க. மெய்ப்பாடு -அவலத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் - வரைவு கடாதல்.

    (பெரு - ரை.) துணர: செயவெனெச்சம். மாலையின் - மாலைபோல. புலம் - நிலம். மல்லற்று - மல்லலையுடையது. மலை - பக்கமலை. பழங்கண் - துன்பம். முரசின் - முரசினால்.

(")
  
    திணை : நெய்தல்.

    துறை : இது, தலைமகன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக் குரைப்பாளாய்ச் சொல்லியது.

    (து - ம்,) என்பது. களவொழுக்கத்தின்கண் எந்நாளும் இடையீடுபடாது தலைமகன் கூடுதலால் இன்பமுற்ற தலைமகள் ஒருநாள் அவன் சிறைப்புறத்தானாகக் கேட்டுமகிழ்ந்து விரையவருமாறு 'யான் எனது புணர்ச்சிநலனைப் புலப்படாது மறைத்துக்கொள்ளும்படியாக இங்ஙனம் தன்மார்பால் வருந்துமென்னியல்பை யறியாச்சேர்ப்பன் என்ன மகனெனக் கூறப்படுவா'னென்று தோழியைநோக்கி வருந்திக் கூறாநிற்பது.