பக்கம் எண் :


160


    (து - ம்,) என்பது, தலைவன் வரையாது களவொழுக்கத்துப் பலகாலும் பகற்குறி வந்தொழுகுதலை விலக்கித் 'தோழி யாம் சேரியின் கண்ணே செல்லுகின்றேம்; நீ வாழ்க; நின்னைப் பிரிதலினாலாற்றாளாய தலைவியின் மெய்முன்னமே மாமையுடையதாதலின், இனிநின் மணமுரசொலி கேட்குமுன் இறந்துபடுமதுகா'ணென அவன் வரையுமாற்றானே வெளிப்படையாக அவலித்துக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "நாற்றமுந் தோற்றமும்" (தொல்-கள- 23) என்னும் நூற்பாவின்கண் "அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" என்பதனால் அமைத்துக்கொள்க.

    
பிரசந் தூங்கப் பெரும்பழந் துணர 
    
வரைவெள் ளருவி மாலையின் இழிதரக் 
    
கூலம் எல்லாம் புலம்புக நாளும் 
    
மல்லற்று அம்மஇம் மலைகெழு வெற்பெனப் 
5
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட! 
    
செல்கம் எழுமோ சிறக்கநின் ஊழி 
    
மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள் 
    
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் 
    
பூண்தாழ் ஆகம் நாணட வருந்திய 
10
பழங்கண் மாமையும் உடைய தழங்குகுரல் 
    
மயிர்க்கண் முரசின் ஒருமுன் 
    
உயிர்க்குறி எதிர்ப்பை பெறலருங் குரைத்தே. 

    (சொ - ள்.) பிரசம் தூங்க பெரும்பழம் துணர வரை வெள்அருவி மாலையின் இழிதர - கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; புலம் கூலம் எல்லாம் புக - சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாளும் இம் மலைகெழு வெற்பு மல்லற்று எனப் பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் - நாட - எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி - யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் - பக்கங்கள் மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய