உச்சிக் கவாஅன் வேட்டச் சீறூர் அவன் கண் கேணி - வறட்சியுற்ற குன்றத்துச்சியின் பக்கத்திலுள்ள வேட்டுவச்சேரியை அடுத்த அகன்ற வாயையுடைய கிணற்றினின்று; பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர் புன்தலை மடப்பிடி கன்றோடு ஆர - பயனைத் தருகின்ற ஆனிரை யுண்ணுமாறு எடுத்து வைத்த தெளிந்த நீர்ப்பத்தரைப் புல்லிய தலையையுடைய இளம்பிடி தன் கன்றுடனே நீர் உண்ண வேண்டி; வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோர் - அப்பத்தரின் வாயை மூடிய விற்பொறியை முறித்துப் போகட்டு அவற்றை உண்பித்துச் செல்லாநிற்கும் கொல்லுந் தொழிலையுடைய களிற்றொருத்தலையுடைய சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்; உள்ளார்கொல் - தாம் சென்றிறுத்த விடத்தும் நம்மைக் கருதினாரில்லைபோலும்; அவர் திறத்து வருந்தியாவதென் ? எ - று.
(வி - ம்.) ஓதி - ஓந்திக்கொருபெயர். இடைக்குறைவிகாரமென்று; குறைக்க வேண்டாதவழியும் இங்ஙனம் வருதலின், வழலை - ஒரு வகைப்பாம்பு; அதனைப் போறலின் ஓந்திவழலை யென்றார்போலும். களிறு - யானைக்குச் சாதிப்பெயர். ஒருத்தல் - விலங்கின் ஆண்பாற் பெயர். மரல்நுகும்பு - மரலின்முற்றாத இளமடல். கேணி நீரைப் பக்கத்துள்ள மிடாவிலிட்டுப் பிறவுண்ணாதபடி ஒரு வில் வைத்து மூடி போடப்படுவது; அதனை வலிந்திழுப்பிற் றிறந்துகொள்ளும்; அங்ஙனமிழுக்காமல் அவ்வில்லினை முரித்தது களிறென்க.
கருதின் இன்னே வந்திருப்பராதலின் உள்ளார்கொலென்றாள். இனி, தங்கட்குப் புரையேறல், தும்மல்முதலாய குறிப்புக்களிலொன்றேனும் நிகழாமையால் உள்ளார்கொலெனவுமாம்.
மடப்பிடியுங் கன்றும் நீருண்ணுமாறு, களிறு பத்தரையுடைத்து உண்பிக்குங் கானத்திற்சென்று நோக்கிய காதலர் நானும் நீயுமகிழும்படி மீண்டுவந்து நம்மை ஆதரித்தாரிலரே, இஃதென்ன கொடுமையென் றிரங்கியது காண்க. மெய்ப்பாடு -அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.
(பெரு - ரை.) இவ்வாறு 'தோழி தலைவனை இயற்பழித்தல் அவனையே நினைத்து உள்ளநெக்குருகும் தலைவியின் நெஞ்சத்தை அந்நிலையினின்று பிறிதோர் நெறியில் மாற்றுதற் பொருட்டாம் என்க. "தலைவனை இயற்பழித்தல் பொறாத தலைவி அவனைப் பாராட்டாநிற்பள், அவ்வாறு பாராட்டும்பொழுது அவள் ஒருவாறு ஆறுதல் எய்துதலும் கூடும்" என்பதை நுண்ணிதின் உணர்க.
(92)
திணை : குறிஞ்சி.
துறை : இது, வரைவுகடாயது.