பக்கம் எண் :


170


கூறியது. அஃறிணையாகிய பன்றியும் கரவிற் சேறற்கஞ்சி மீளுநாடனாயிருந்தும் நீ அஞ்சாது புகுதலின் என்கண்ணுறங்கிலதென்றிரங்கினாள்.

    உள்ளுறை :-பன்றி தினையை யுண்ணவேண்டி இயந்திரமமைத்த புழையிற்புகும்போது பல்லியடிப்பக்கேட்டு ஏதமுடைத்தென்று மீண்டு தன் அளைபுகுமென்றது, தலைமகன் தலைமகளது இன்பந்துய்ப்பக் காவன் மாளிகையுட் கரவிற்புகும்பொழுது நிலவு வெளிப்படன் முதலாய இடையீடு நிகழக் கண்டு ஏதமுடைத்தாமென்று மீண்டும் தன்பதி புகுதவும் அமையு மென்றதாம். இதனான், இடையீடின்றித் துய்க்க வேண்டி வரைந்தெய்துக வென்றதாயிற்று. மெய்ப்பாடு - அவலத்தைச் சார்ந்த பெருமிதம் பயன் - வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) செய்ம்மேவல் எனற்பாலது இசைநோக்கி யகரமும் மகரமும் தனித்தனி அளபெடுத்துச் செய்ய்ம்ம் மேவல் என்றாயிற்று. பிறக்கு-பின்புறம். நீ இரவின் வருதல் கொடிது. அதனினும் பொருந்தல் ஒல்லாக் கண் கொடிது; அதனினும் வாரா நெஞ்சு கொடிது என்றவாறு. 'கடியுடை வியனகர்' என்றும் பாடம்.

(98)
  
    திணை : முல்லை.

    துறை : இது, பருவங்கண் டாற்றாளாய தலைவியைத் தோழி பருவமன்றென்று வற்புறுத்தியது.

    (து - ம்,) என்பது, வினைவயிற்சென்ற தலைவன் குறித்த கார்ப்பருவங்கண்டு வருந்திய தலைவியைத் தோழி, இது கார்ப்பருவமன்று, அறியாமையாலே கடனீ ரையுண்ட முகில் மழையைப் பெய்யக்கண்டு கார் காலமாமெனப் பிடவுங் கொன்றையுங் காந்தளு மலர்ந்தன; அவற்றைநோக்கி நீ மயங்காதே கொள்ளென வற்புறுத்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 23) என்னும் நூற்பாவினுள் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
நீரற வறந்த நிரம்பா நீளிடைத் 
    
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் 
    
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் 
    
தாம்வரத் தெளித்த பருவங் காண்வர 
5
இதுவோ என்றிசின் மடந்தை மதியின்று 
    
மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை 
    
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் 
    
காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில 
    
1பிடவுங் கொன்றையுங் கோடலும் 
10
மடவ வாகலின் மலர்ந்தன பலவே. 
  
 (பாடம்) 1. 
பிடவமுங்.