பக்கம் எண் :


171


    (சொ - ள்.) மடந்தை நீர்அற வறந்த நிரம்பா நீள் இடை - மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் அஞ்சு வரப் பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்-வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம்வரக் காண்வரத்தெளித்த பருவம் இதுவோ என்றிசின்-தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தெளியக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; மதி இன்று மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை - அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு - தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; தேர்வு இல பிடவும் கொன்றையும் கோடலும் - அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; மடவ ஆகலின் பல மலர்ந்தன - அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !; எ - று.

    (வி - ம்.) நீர் - ஈரப்பண்பு. உருப்பு - வெப்பம். கமம் - நிறைவு. இறுத்தல் - பெய்தொழித்தல். கோடல் - காந்தள். மடவ - அறியாதன. இது பருவமன்றெனவே அவர் பொய்யுரையார், குறித்த பருவத்து வருவரெனத் தெளிவித்தனளாயிற்று. மெய்ப்பாடு - மருட்கை. பயன் - தலைவியைத் தெளிவித்தல்.

    (பெரு - ரை.) அது கார்ப்பருவமேயாகவும் தலைவியை ஆற்றுதற்குப் பிறிதொரு வழி காணாமையால் தோழி இங்ஙனம் தன் படைத்து மொழியால் மருட்டி ஆற்றுவிக்கின்றாள் என்க. இச் செய்யுளோடு,

  
"மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை 
  
 கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய 
  
 பருவம் வாரா அளவை நெரிதரக் 
  
 கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த 
  
 வம்ப மாரியைக் காரென மதித்தே"        (குறுந் - 66 ) 

எனவரும் குறுந்தொகைச் செய்யுளை ஒப்பு நோக்குக.

(99)
  
    திணை : மருதம்.

    துறை : இது, பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்பவிறலிக்குடம்படச் சொல்லியது.