பக்கம் எண் :


187


    திணை : பாலை.

    துறை : இது, பிரிவிடை யாற்றாளாய தலைமகளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

    (து - ம்,) என்பது, வினைவயிற் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்து வாராமையாலே வருந்திய தலைவியை வினாவிய தோழிக்கு அவள் என் காதலர் வாராமையால் வாடைவீசு மிம் மாலைப் பொழுதானது யான் தனித்து வருந்தியொழியுமாறு செல்லாநின்றது; இவ்வழியான் எங்ஙனந் தனியிருந்தாற்றுகிற்பே னெனப் புலம்புவதன்றி வேறில்லை காணென வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "அவனறி வாற்ற அறியு மாகலின்" (தொல். கற். 6) என்னும் நூற்பாவினுன்கண் "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.

    
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின் 
    
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று 
    
அன்ன வோவிந் நன்னுதல் நிலையென 
    
வினவல் ஆனாப் புனையிழை ! கேளினி 
5
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென 
    
விரைக்கும் வாடை இருள்கூர் பொழுதின் 
    
1தொளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து 
    
உச்சிக் கட்டிய கூழை ஆவின் 
    
நிலையென ஒருவேன் ஆகி 
10
உலமரக் கழியுமிப் பகல்மடி பொழுதே. 

    (சொ - ள்.) ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின் காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று - 'நின்னைப் பிரியேமாகி எப்பொழுதும் ஒன்றியிருத்தும்' என்று கூறிய பழைமையாகிய நட்பினின்றும் காதலர் பிரிந்தகன்றதனாலே கலங்கி மயங்குற்று; இந்நல் நுதல் நிலை அன்னவோ என வினவல் ஆனாப் புனைஇழை கேள் - இந்நல்ல நுதலையுடையாளுடைய நிலைமை அப்படிப்பட்டனவோ? என்று வினாவுதல் ஒழியாத அலங்கரித்த அணிகலனையுடையாய் யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென - இப்பொழுது கூறுதற்கியலாத துன்பம் விரைந்துபற்ற; இரைக்கும் வாடை பகல் மடி பொழுது - ஒலிக்கும் வாடை வீசுதலையுடைய ஆதித்த மண்டிலம் மேற்கே மறைகின்ற இம் மாலைகாலமானது; இருள் கூர் பொழுதின் தொளி உடைத்தொழுவில்

  
 (பாடம்) 1. 
துளி.