(து - ம்,) என்பது, உடன்போயினாள் மகளெனக்கேட்ட நற்றாய் இளமையின்கண் அறிவுமுதிர்ந்தமை நோக்கி வியந்தனளாயினும், இதுகாறும் பிரிந்தறியாதாள் பிரிதற்காற்றாளாய் முன்பு உணவுண்ணவும் வெறுக்குஞ் சிறுவிளையாட்டினையுடையாள் அறிவும் ஆசாரமும் எப்படியறிந்தனள் ? தந்தை சோற்றைக் கருதாளாய் மறுத்துண்ணுஞ் சிறுவன்மையளாயினளேயென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "தன்னும் அவனும் அவளும் சுட்டி" (தொல். அகத். 36) எனவரும் நூற்பாவின்கண் 'நன்மை' என்றதனால் நன்மை குறித்து நற்றாய் புலம்பினள் என்க.
துறை : (2) மகள் நிலையுரைத்ததூ உமாம்.
(இ - ம்.) என்பது, வரைந்த பின் இல்வாழ்க்கையின் மணமனைச் சென்றுவந்த செவிலி, பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்துகின்றாள்,