நகைநோக்கித் தன்வழிவரல் வருத்தம்போக்கி மகிழ்தலின், வாலெயிற்றோயென விளித்தான். இனி இடையீடில்லையெனக் கொண்டமையின் தொளெய் தினம் என்றதன்றி நெடிய வைகி வண்டலயர்ந்தேகென்றான். நெறி பொழில ஊரவென்றது நண்பகலும் மெல்லமெல்ல ஏகலாமென்றுணர்த்தியதாம். நெடியவைகி யென்றது முதல், சுரங்கடந்தனம் இனி அஞ்சாதேயென்று தெளிவித்தானுமாம். ஆர்வமாக்கள் தெய்வத்தைக்கண்டு தாம் முயன்றுவைத்த காரியத்தைப் பெறுதல்போல, யாம் நின்னைக்கண்டு நின்றோளை யெய்தினமென்க.
மெய்ப்பாடு - உவகை.
பயன் - தலைமகளை அயர்வகற்றல். இதனைப் பாலைத்திணையிற் புணர்ச்சி நிகழ்வதற்கும், தலைவியிடத்துக் தலைவன் கூற்று நிகழ்வதற்கு மேற்கோளாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்;
(தொல்-பொ-15.41 உரை.) (பெரு - ரை.) அழிவிலர் முயலும் மாக்கள் என்றும், அழற்றகை யொண்முறி என்றும் பாடம். இவற்றிற்கு - அழிவிலராய் முயலும் மாக்கள் என்றும், தீப்பிழம்பை யொத்த ஒள்ளிய தளிர் என்றும் பொருள் கொள்க.
(9)
திணை : பாலை.
துறை : இஃது, உடன்போக்குந் தோழி கையடுத்தது.
(து - ம்.) என்பது, தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, வைகிருளிலே தலைவியைத் தலைவன்பாற் சேர்த்துக் கையடுத்தல் செய்து, இருவரையும் வலஞ்செய்து நின்று நின் மாறுபடாத மொழியைத் தெளிந்து புகல்புக்க இவளை முதுமையெய்தினும் கைவிடாது பாதுகாப்பாயாக வெனத் தலைமகனுக்கு ஓம்படுத்துக் கூறாநிற்பது.