(இ - ம்.) இதற்கு, "கரணத்தின் அமைந்து முடிந்தகாலை" (தொல். கற். 5) என்னும் நூற்பாவின்கண் "நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும்" என்னும் விதிகொள்க.
| தடமருப்பு எருமை மடநடைக் குழவி |
| தூண்தொறும் யாத்த காண்தகு நல்லில் |
| கொடுங்குழை பெய்த செழுஞ்செய் 1 பேதை |
| சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப |
5 | வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் |
| புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் |
| பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் |
| அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து |
| அட்டி லோளே அம்மா அரிவை |
10 | எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாளன்று |
| சிறியமுள் எயிறு தோன்ற |
| முறுவல் கொண்ட முகங்காண் கம்மே. |
(சொ - ள்.) தட மருப்பு எருமை மட நடைக் குழவி தூண்தொறும் யாத்த காண்தகு நல்இல் - வளைந்த கொம்பினையுடைய எருமையின் இளநடையையுடைய கன்றுகளைத் தூண்கள்தோறும் கட்டியிருக்கின்ற காட்சி மிகுதியால் யாவரும் காணத்தக்க நல்ல மனையின்கண்; கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை சிறு தாழ் செறித்த மெல்விரல் சேப்ப - வளைந்த குண்டலத்தைக் காதிலணிந்த செழுவிய செய்ய பேதைமையையுடைய காதலி சிறிய மோதிரஞ் செறித்த மெல்லிய விரல் சிவக்கும்படியாக; வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண்டு அமர்த்த கண்ணள் - வாழையிலையைக் கொய்துவந்து அடிக்காம்பு பருத்திருத்தலின் அதனை வகிர்ந்து பரிகலமமைத்து அடிசிலாக்குதலாலே புகைபடிந்து அமர்த்த கண்களையுடையளாய்; தகைபெறப் பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர் அம் துகில் தலையில் துடையினள் - அழகுபெறப் பிறை போன்ற நுதலினுண்டாகிய சிறிய நுணுகிய பலவாய வியர்வை நீரை அழகிய முன்றானையினுனியாலே துடைத்துக்கொண்டு; நம்புலந்து அட்டிலோள் - நம்மீது புலவி மிக்கு அடிசிற்சாலையிடத்திராநின்றாள்; விருந்து எமக்கு வருக - இப்பொழுது விருந்தினராய் வருபவர் எம்முடன் வருவாராக! அங்ஙனம் வரின்; அம்மா அரிவை சிவப்பாள் அன்று - இந்த அழகிய மாமைநிறத்தையுடைய அரிவை சினங்கொண்டு ஒருபொழுதும் கண் சிவப்பதில்லை, அன்றியும் குறுமுறுவல் கொண்ட முகத்தினளாய் இருப்பள்; சிறிய முள் எயிறு தோன்ற முறுவல் கொண்டமுகம் காண்கம் - ஆதலின் நமது முயக்கத்துக்கு இன்றியமையாத இவளது சிறிய முட்போன்ற