(து - ம்.) என்பது, தலைவனாலே பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவியை நெருங்கிப் 'பெரிதும் நகைத்தற்காகிய செயலொன்றனை நீ கேள்; காதலர் நம்மை இங்கே கைவிட்டுத் தமியராய் வினைவயிற் செல்வாரெனவும், அவர் மீண்டுவருமளவும் நாம் மனையின்கண்ணே வருந்தியிருக்க வேண்டு'மெனவுங் கூறாநிற்பரென்று தலைவியினுள்ளம் தன்பால் மீண்டு இவளது முகத்தை நோக்கிக் கேட்கும் வண்ணங் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பிறவும் வகைபட வந்த கிளவி" (தொல். கற். 9) என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| பெருநகை கேளாய் தோழி காதலர் |
| ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம் |
| பொம்மல் ஓதி நம்மிவண் ஒழியச் |
| செல்ப என்ப தாமே சென்று |
5 | தம்வினை முற்றி வரூஉம்வரை நம்மனை |
| வாழ்தும் என்ப நாமே அதன்தலைக் |
| கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்பப் |
| படுமழை உருமின் உரற்றுகுரல் |
| நடுநாள் யாமத்துந் தமியங் கேட்டே. |
(சொ - ள்.) தோழி காதலர் ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம் பொம்மல் ஓதி - தோழீ! காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும் நின் உயிரின் தன்மை வேறுபடுகின்ற பொலிவுற்ற கூந்தலையுடையாய் ! பெரு நகை கேளாய் - யாவரும்