பக்கம் எண் :


224


    பெரிதும் நகைக்க வல்ல ஒரு செய்கையைக் கேட்பாயாக!; நம் இவண் ஒழியத் தாமே செல்ப என்ப - நம்மை அவர் இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தமியராய் வினைவயிற் செல்லக் கருதியுள்ளார் என்று உழையர் கூறாநிற்பர்; சென்று தம் வினை முற்றி வரூஉம் வரை - அவர் தனியே சென்று தமது வினை முடித்து வருமளவும்; கேழ் கிளர் உத்தி அரவுத் தலைப் பனிப்பப் படுமழை உருமின் உரற்று குரல் - நிறம் விளங்கிய படப்பொறியையுடைய அரவினது தலை நடுங்கும்படி பெய்கின்ற மழையிடையிட்ட இடியினது முழங்குகின்ற முழக்கத்தை; நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டு நம் மனை அதன் தலை வாழ்தும் என்ப - இரவு நடுயாமத்துந் தமியமாய் இருந்து கேட்டு நாம் நமது மனையின்கண்ணே அதன் மேலும் உயிர் வாழந்திருக்ககடவே மென்றுங் கூறாநிற்பர்; இஃதென்ன கொடுமை காண்! எ - று.

     (வி - ம்.) பொம்மல்-பொலிவு. உத்தி-படப்பொறி. உரற்றுதல்-முழங்குதல்.

    பிரிந்தால் நாம் வாழ்கலமென்பதை அறிந்தும் பிரிவரெனில் இது பெருநகைக் கிடமெனக் கூறினாள். அணைத்திருப்பவரையும் அச்சுறுத்தும் இடிமுழக்கத்தை யாம் தனித்திருந்து கேட்டு உயிர்வாழ்தல் இயலாதென்பதை அவர் அறிந்திலரே யென்பதுபட வாழ்துமென்று கூறாநிற்பரென இரங்கிக் கூறினாள். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைமகளைத் தன்முகமாக்கல்.

     (பெரு - ரை.) தலைவன் பிரிகின்றான் என்னும் செய்தியை அறிந்த தோழி அதனைத் தலைவி ஆற்றும் வகையிற் கூறி ஆற்றுவிப்பான் முகம்புகுகின்றாள் ஆகலின் இவ்வாறு ஏதிலார் கூறுகின்றனர். அக்கூற்று எனக்கு நகையுண்டாக்குகின்றது என்று சொல்லாட்டம் தொடங்குகின்றாள். தலைவன் செயலை வெறுப்பாள் போன்று கூறினும் அவள் முகங் கொடுத்தபின்னர் வினையே ஆடவர்க்குயிர் ஆதலின் அவர் வினைவயிற் பிரிதன் முறையே என்றும்; மகளிர்க்கு அப் பிரிவினை மனைக்கண்ணிருந்து ஆற்றுவதே கடமை என்றும் கூறி ஆற்றுவித்தற்குத் தோற்றுவாய் செய்துகொள்வாள் தம் வினை முற்றி வரூஉம் வரை என்று வினையைத் தலைவனுக்குரிமையாக்கியும், நம்மனை வாழ்தும் என ஆற்றியிருத்தற்குரிய மனையைத் தலைவிக்குரிமை யாக்கியும் கூறும் நுணுக்கம் உணர்க.

(129)
  
     திணை : நெய்தல்.

     துறை : இது, பிரிவிடை மெலிந்த தலைவி, வன்பொறை எதிரழிந்து சொல்லியது.

     (து - ம்.) என்பது, தலைவன் பிரிதலான் மெலிவடைந்த தலைவி தன்னை வலிதலே பொறுத்திருவென்று தெளிவிக்கும் தோழியை