பக்கம் எண் :


225


நோக்கி, "நம் காதலர் இல்வாழ்க்கையி லிருப்பதினுங் காட்டில் இனிய பொருள் வேறொன்றுளதெனக் கருதிச்சென்றனர் போலும்; அங்ஙனமாக அவர் என்னைப் பிரிந்ததேயன்றி எத்தன்மையளாயினாளென வினாவி யறிந்தாருமிலர்; நோயோ கைகடந்தன; உசாத்துணையுமில்லேன்; எவ்வாறாற்றியுளேன் ஆவே'னென் றெதிரழிந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் (தொல். கற். 6) என்பதன்கண் காய்தல் என்பதனால் அமைத்துக்கொள்க.

    
வடுவின்று நிறைந்த மான்தேர்த் தெண்கண்  
    
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக்  
    
கோலின் எறிந்து காலைத் தோன்றிய  
    
செந்நீர்ப் பொதுவினைச் செம்மல் மூதூர்த்  
5
தமதுசெய் வாழ்க்கையின் இனிய துண்டோ  
    
எனைவிருப் புடையார் ஆயினும் நினைவிலர்  
    
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்  
    
வாடிய வரியும் நோக்கி நீடாது  
    
எவன்செய் தனளிப் பேரஞர் உறுவியென்று  
10
ஒருநாள் கூறின்றும் இலரே விரிநீர்  
    
வையக வரையளவு இறந்த  
    
எவ்வ நோய்பிறிது உயவுத்துணை இன்றே.  

     (சொ - ள்.) தெள் கண் மடி வாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப - தோழீ ! தெளிந்த ஓசையையுடைய இடமகன்ற தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமை இடையில் ஒலிப்ப; வடுவின்று நிறைந்த மான்தேர் கோலின் எறிந்து - குற்றமின்றி எல்லா இலக்கணமும் நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோலாலெறிந்து செலுத்தி; காலைத் தோன்றிய செந்நீர்ப் பொதுவினைச் செம்மல் - விடியற்காலையிலே புறத்தே தோன்றிச் சென்ற செம்மையாகிய நீர்மையையும் பொதுவாகிய செயலையும் உடைய நம் காதலர்; மூதூர் தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ - பழைமையாகிய இவ்வூரின்கண்ணே தமதாகச் செய்யப்படுகின்ற இல்வாழ்க்கையினுங்காட்டில் இனியதொரு பொருளும் உண்டோ? அதனை அறியாராய் வேறொரு பொருளுண்டென அகன்று விட்டனர்; எனை விருப்பு உடையர் ஆயினும் - எவ்வளவு விருப்புடையவராயினும்; நினைவு இலர் - இப்பொழுது எம்மை நினையாதவராயினர்; நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி - அன்றியும் அவருக்கு உடன்பட்ட என்னெஞ்சும் நெகிழ்ச்சியுற்ற தோளும் வாடிய எனது