(பெரு - ரை.) ஒருநாள் கூறின்றும் இலர் என்றது, அஞர் உறுவி எவன் செய்தனள் என அறிந்து வரும்படி ஒருநாள் ஒரு தூதனிடத்துக் கூறி விடுத்தாருமிலர் என்றவாறு. இதன்கண் மூதூர்த் தமது செய் வாழ்க்கையின் இனிய துண்டோ என்புழி செய் வாழ்க்கை என்றது அறஞ் செய்து வாழும் வாழ்க்கையை. இக்கருத்தோடு "தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால், அம்மா அரிவை முயக்கு" எனவரும் அருமைத் திருக்குறளையும்
(1107) "மன்னவன் - புறந்தர வருவிருந்து ஓம்பித், தன்னகர் விழையக் கூடின், இன்னுறல் மார்ப அதுமனும் பொருள்" எனவரும் கலியையும்
(பாலை- 8) நினைக.
இனி, தோழி "நங்காதலர் நின்பாற் பெரிதும் விருப்பமுடையர்காண், ஆதலால் விரைந்து மீண்டும் வருகுவர்; அவர் வருந்துணையும் ஆற்றுக," என்று வற்புறுத்துதலின் அவள் கூற்றையே கொண்டு கூறி மறுப்பாள் 'எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்' என்று எதிரழிந்து கூறினள் என்க. 'நீ தானும் ஒரு தூதுவிடுத்து அவர் நிலை அறிந்து கூறுவாயுமல்லை!' எனத் தோழியைக் குறிப்பாக வைவாள், 'உயவுத்துணை பிறிது இன்று' என்றாள்.
(130)
திணை : நெய்தல்.
துறை:இது, மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன் வேறுபடாமையாற்றுவித்தாய் பெரியை காண் என்றாற்குத் தோழி சொல்லியது.