பக்கம் எண் :


234


 5   
இனிதுமன் றம்ம தானே பனிபடு 
    
பல்சுரம் உழந்த நல்கூர் பரிய 
    
முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும் 
    
வாலுளைப் பொலிந்த புரவித் 
    
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. 

    (சொ - ள்.) பனி படு பல் சுரம் உழந்த நல்கூர் பரிய முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும் - குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய நிலத்து வருந்தி வருதலாலுண்டாகிய குறைந்த செலவினையுடையவாய் ஒலிக்கின்ற அலைமோதிக் கொழிப்பக் கிடந்த புதிய மணலிலே தேருருள் அழுந்துதலானே செல்லமாட்டாது சுழலாநிற்கும்; வால் உளை பொலிந்த புரவித் தேரோர் நம்மொடு நகா ஊங்கு - வெளிய பிடரிமயிர் பொலிவு பெற்ற புரவிபூட்டிய தேரினையுடைய தலைவரொடு மகிழ்ந்து ஊடாடாத முன் உவ்விடத்தே; தூங்கல் ஓலை ஓங்கும் மடல் பெண்ணை மா அரை புதைத்த மணல்மலி முன்றில் - தொங்குகின்ற ஓலையையும் நீண்ட மடலையும் உடைய பனையினது கரிய அடி மரம் புதைபடுமாறு மூடப்பட்ட மணல் மிக்க முற்றத்தின்கணிருந்து; வரையா தாரம் வருவிருந்து அயரும் - அளவுபடாத உணவுப் பொருளை வருகின்ற விருந்தினர்க்குப் பகுத்துக்கொடா நிற்கும்; தண்குடி வாழ்நர் அம் குடி சீறூர் மன்ற இனிது அம்மதானே - மெல்லிய குடிவாழ்க்கை யுடையராயிராநின்ற அழகிய குடியிருப்பையுடைய சீறூர் மிக இனிமையாயிருந்தது; அவரொடு மகிழ்ந்து ஊடாடிய பின் அவர் நமது அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது; எ - று.

    (வி - ம்.) தாரம்-உணவுப்பொருள். சுரம்-கடத்தற்கரிய நிலம். பரி-செலவு. கொட்குதல்-சுழலுதல். உளை-பிடரிமயிர். ஊங்கேயுள்ள சீறூரெனக் கூட்டுக. நகை-மகிழ்ந்து உடன்படுதல். முன்றில்-முற்றம்.

    ஊரார் அலரெடுத்தலால் இனிமை கழிந்ததென்றாள். தன்னூராரைப் போல நீயிரும் மணஞ்செய்துகொண்டு இல்லற நிகழ்த்தற்பாலிரென்னுங் குறிப்பால் தன்னூர் வருவிருந்தயருங் குடியென்றாள்.

    மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.

    (பெரு - ரை.) நகாஅ ஊங்கு என்பதற்கு, நகாமுன்பெல்லாம் எனினுமாம்; உவ்விடத்தே எனல் வேண்டாவாம். தண்குடி - தன்கண் வாழ்வார்க்கு உடலும் உளமும் குளிருஞ் சிறப்புடைய குடி என்க. மன்ற: தேற்றப் பொருட்டு. அம்ம: கேட்பித்தற்கண் வந்தது. ஊடாடல்-அளவளாவல்.

(135)