(து - ம்,) என்பது, வினைவயிற்செல்லுந் தலைமகன் தன் நெஞ்சை நோக்கிச் 'சுரத்திற்செல்லக் கருதிய நீ நம் காதலியைக் கைவிடக் கருதினை போலும்; அங்ஙனமாயின் இவளினுங்காட்டில் அரியதொன்றனையடைந்தனை மன்'னென வருந்தி இகழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு "வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.
| தண்ணிய கமழுந் தாழிருங் கூந்தல் |
| தடமென் பணைத்தோள் மடநல் லோள்வயின் |
| பிரியச் சூழ்ந்தனை ஆயின் அரியதொன்று |
| எய்தினை வாழிய நெஞ்சே செவ்வரை |
5 | அருவி ஆன்ற நீரில் நீளிடைக் |
| கயந்தலை மடப்பிடி உயங்குபசி களைஇயர் |
| பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை |
| அருஞ்சுரஞ் செல்வோர்க்கு அல்குநிழல் ஆகும் |
| குன்ற வைப்பின் கானம் |
10 | சென்றுசேண் அகறல் வல்லிய நீயே. |