(சொ - ள்.) நெஞ்சே செவ் வரை அருவி ஆன்ற நீர் இல் நீள்இடை - நெஞ்சே! செவ்விய மலையருவியின்கண்ணே அமைந்த நீர் இல்லாத நீண்ட நெறியிடத்தில்; கய தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் - மெல்லிய தலையையுடைய இளைய பிடியானையின் வருந்திய பசியைப் போக்குமாறு; பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஓமை அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்கும் நிழல் ஆகும் - பெரிய களிற்று யானை முறித்துத் தள்ளிய வளைந்த அடியையுடைய ஓமைமரம் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லுபவருக்குத் தங்கும் நிழல் ஆகாநிற்கும்; குன்றவைப்பின் கானம் சென்று சேண் அகறல் வல்லிய நீ - குன்றங்களை இடையிடையே கொண்ட கானத்துட் புகுந்து நெடுந்தூரம் அகன்று போதலைக் கருதிய நீ; தண்ணிய கமழும் தாழ் இருங்கூந்தல் தடமெல்பணைத்தோள் மட நல்லோள் வயின் - மெல்லியவாய்க் கமழ்கின்ற பிடரியிலே தாழ்ந்த கரிய கூந்தலையும் அகன்ற மென்மையாகிய பருத்த தோளையும் மடப்பத்தையும் உடைய நல்ல நங் காதலியை; பிரியச் சூழ்ந்தனை ஆயின் - கைவிட்டுப் பிரிதற்கு எண்ணா நின்றனை, அதனை ஆராயுமிடத்து; அரியது ஒன்று எய்தினை - இதுகாறும் அடைதற்கு அரியதும் இவளினுங்காட்டிற் சிறந்ததுமாகிய ஒருபொருளை அடைந்து விட்டனைமன்; வாழிய - நீ அங்ஙனம் அடைந்த பொருளோடு நீடு வாழ்வாயாக! யான் இவளொழிய வாரலேன்காண்! எ-று.
(வி - ம்.) தண்மை - மென்மை. ஆன்ற - அமைந்த. அல்குதல் - தங்குதல். வாழிய : இகழ்ச்சிக்குறிப்பு. யான் இவளொழிய வாரேன் என்றது சொல்லெச்சம். சொல் எச்சமாவது ஒரு சொல் எஞ்சி நிற்பது.
இவளின் தண்ணிய கமழுந் தாழிருங்கூந்தலை வெறுக்கின்றதன் பயன் அருவிநீரில்லாத நீளிடைச் சேறலாகியதென்றான். மென்பணைத் தோளை வெறுத்ததன் பயன், இருக்கவும் இடனின்றி ஓமையினிழலிலே குன்றவைப்பின் கானத்தின்கண்ணே சென்றுதங்கி அழியலாயினை என்றான். இது மேலோர்க்கு ஒரு தீதிழைப்பின் அதனை மூன்று நாளினுள்ளே துய்ப்பரென்னும் வழக்கு. நீ சென்று ஆங்கு வைகுமிடனும் பிடியின் பசியைப் போக்குமாறு களிறு வீழ்த்திய ஓமைநிழல் கண்டாய்; அந்நிழலே நின் காதலியை நீ கைவிட்டமை கொடிதெனவும், களிறு பிடிபசியைப் போக்கியதுபோல நீ அவளது காமவின்பத்தைத் தணிக்கற்பாலை யென அறிவுறுத்துமெனவும் உவமை முகத்தாற் குறிப்பித்தானுமாம்.
உள்ளுறை :- பிடியானையினிமித்தம் களிறு முறித்துச் சாய்ந்த ஓமையுமாம். சுரஞ்செல்வோர் தங்குதற்குரிய நிழலாகுமென்றது பொருளின் நிமித்தமாக உன்னாலே பிரித்து நீக்கப்பட்ட தலைவி பசலை பாய்ந்து நலனை உண்டு தங்காநிற்ப அவ் ஓமை வாடுவதுபோல வாடாநிற்கும் என்றதாம். மெய்ப்பாடு - பிறன்கட்டோன்றிய எள்ளல்பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல்.