பக்கம் எண் :


238


    (பெரு - ரை.) அருவி ஆன்ற என்றது, அருவிவீழ்தல் இன்றி வறிதாய என்றவாறு. நீரும் நிழலும் இல்லாத நீளிடையிலே கூந்தலையும் தோளையும் உடைய நல்லோளைப் பிரிந்து செல்லச் சூழ்ந்தனை ஆயின் நீ கருதிய பொருள் இவளினுங்காட்டிற் சிறந்ததாதல் வேண்டுமன்றோ? அங்ஙனம் சிறந்த தொன்றனை நீ கண்டதுண்டோ என்று நெஞ்சினைப் பேதமையூட்டியபடியாம். நீ கருதும் பொருள் இவள் மென்றோள் துயிலினும் சிறந்ததாகாதுகாண் என்பது கருத்து.

(137)
  
    திணை : நெய்தல்.

    துறை : இஃது, அலராயிற்றென ஆற்றாளாய தலைமகட்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

    (து - ம்,) என்பது, தலைமகன் பிரிந்தமையால் வேறுபட்டுக் காட்டிய தலைவியின் மெய்யை நோக்கி ஊரார் அலர்தூற்றுதலும் அதனை ஆற்றாளாயினாளைத் தோழி சிறைப்புறமாகக் கேட்டுநின்ற தலைவனுக்கு அறிவுறுத்துமாற்றானே 'முன்பு தலைவன் நினக்கு மாலை சூட்ட அதனைக் கண்ணாலே கண்டதல்லது இவ்வூரறிந்தது பிறிதொன்றன்று: அதற்கு நீ ஆற்றாதவாறு என்னை"யெனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின் பாற்படுத்துக.

    
உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை 
    
மலையுய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக் 
    
கணங்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த 
    
பண்ணழி பழம்பார் வெண்குருகு ஈனும் 
5
தண்ணந் துறைவன் முன்னாள் நம்மொடு 
    
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் 
    
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக் 
    
கண்ணறிவு உடைமை அல்லது நுண்வினை 
    
இழையணி அல்குல் விழவாடு மகளிர் 
10
முழங்குதிரை இன்சீர் தூங்கும் 
    
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே. 

    (சொ - ள்.) உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை மலை உய்த்துப் பகரும் - உவர் நிலத்து விளைகின்ற குன்றுபோலும் உப்பின் குவியலை மலைநாட்டகத்தே கொண்டுபோய் விலைகூறி விற்கின்ற; நிலையா வாழ்க்கைக் கணம் கொள் உமணர் - ஓரிடத்திலும் நிலைத்தலில்லாத வாழ்வினையுடைய கூட்டங்கொண்ட உப்பு வாணிகர்; உயங்குவயின் ஒழித்த பண் அழி பழம்பார் வெள் குருகு