(து - ம்,) என்பது, பகற்குறியின்கண் வரையாது வந்தொழுகுந் தலைமகன் ஒருநாள் சிறைப்புறமாக வருவதறிந்த தோழி அவன் கேட்டு விரைய வரையு மாற்றானே தலைவியை நோக்கி நம் அன்னை நின்னை எதிர்ப்பட்டுத் 'தினைக்கொல்லையைக் காவாது யாங்குச் சென்றனை' என்று கடிந்து கேட்டலும் அதற்குத் தக்கவாறு மறைத்துக் கூறாமல் 'யாம் நாடனைக் கண்டதுமில்லேன், சுனையாடியது மில்லேன்' என்று மறந்து உண்மை தோன்றக் கூறினையே இனி எப்படியாவோமோ வென்று படைத்துமொழி கிளவியால் மருட்டிக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியின்கண் அமைத்துக்கொள்க.
| யாங்கா குவமோ அணிநுதற் குறுமகள் |
| தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல் |
| செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று |
| எவ்வாய்ச் சென்றனை அவணெனக் கூறி |
5 | அன்னை ஆனாள் கழற முன்நின்று |
| அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை |
| அறியலும் அறியேன் காண்டலும் இலனே |
| வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து |
| சுனைபாய்ந் தாடிற்றும் இலனென நினைவிலை |
10 | பொய்யல் அந்தோ வாய்த்தனை அதுகேட்டுத் |
| தலையிறைஞ் சினளே அன்னை |
| செலவொழிந் தனையால் அளியைநீ புனத்தே. |
(சொ - ள்.) அன்னை அணி நுதல் குறுமகள் தேம்படுசாரல் சிறுதினைப் பெருங்குரல் - தோழீ! அன்னையானவள் என்னை நோக்கி "அழகிய நெற்றியையுடைய இளமகளே! இடமகன்ற மலைச் சாரலின்கணுள்ள சிறிய தினையின் பெரிய கதிரை; செவ்வாய் பைங்கிளி கவர நீ அவண் எவ்வாய்ச் சென்றனை எனக் கூறி - சிவந்த வாயையுடைய பசிய கிளி கொய்துகொண்டு போகின்ற அளவும் நீ அதனைக் காவாது ஆங்குநின்று எவ்விடத்திற்குச் சென்றனை"? என்று கூறி; ஆனாள் கழற முன்நின்று வெதிர்புனை தட்டையேன் அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை அறியலும் அறியேன் - அமையாளாகிப் பலபடியாக வினாவுதலும் நீ அச்சமுற்று, அவள்முன் நின்று 'மூங்கிற் பிளவாற் செய்த