பக்கம் எண் :


255


கிளிகடி கருவியாகிய தட்டையையுடைய யான் அருவி யொலிக்கும் பெரிய மலைநாடனைக் காதாலே கேட்டறிதலுஞ் செய்திலேன்; காண்டலும் இலன் - கண்ணாலே காண்டலுஞ் செய்திலேன்; மலர் பூ கொய்து சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என - மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையிலே பாய்ந்து ஆடியதுஞ் செய்திலேன் என்று; நினைவு இலை பொய்யல் அந்தோ வாய்த்தனை - நினைவில்லாது பொய்யுஞ் சொல்லாயாய் ஐயோ! உண்மையை யுரைத்துவிட்டனையே!; அது கேட்டு அன்னை தலை இறைஞ்சினள் - அதனைக் கேட்டு அன்னை சினத்தோடு வெள்கித் தலையிறைஞ்சி நின்றனள் கண்டாய்!; நீ புனத்துச் செலவு ஒழிந்தனை - ஆதலின் நீ தினைப்புனத்தின் கண்ணே செல்லுதலைப் போக்கிக்கொண்டனை மன்!; அளியை - இவ்வளவு அறியாமையையுடைய நீ இனி எங்ஙனம் குடிமை பூண்டொழுகவல்லாய் என்று எவரும் இரங்கத் தக்கனையாயினை; யாங்கு ஆகுவம் - அவளது முனிவினுள்ளே படிதலால் இனி யாம் எவ்வண்ணம் உய்யவல்லேமோ? எ - று.

    (வி - ம்.)தேம் - இடம். அறிதலும் அறியேனென்றது காரிய வாசகம்.

    தட்டை - கிளிகடிகருவி. இஃது அழிவில்கூட்டத் தவன்புணர்வு மறுத்தல்.

    தலைவனையே நினைவிலுடைமையால் வழுவியுரைத்தனை யென்பாளாய் அவனையே தலைவி கருதியிருக்கும் அன்பின் நிலைமை புலப்படுத்தினாள். தலையிறைஞ்சினளென்றது நமது குடி மாசூர்ந் தலர் கொள்ளலாயதென வெள்கினளாதலின் அதற்கேற்றதோர் ஊறிழைப்பளென அஞ்சி யச்சுறுத்தியதாம்.

    செலவொழிந்தனை யென்றது இற்செறிப்பறிவுறுத்தியதாம். இப் படைத்துமொழிகிளவி தோழி கூற்று வழுவாயினும் வரைதல் வேட்கையாலே கூறுதலின் வழுவமைதியாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுடன்படுத்தல்.

    (பெரு - ரை.) இதன்கண் "சிறுதினைப் பெருங்குரல்" "செவ்வாய்ப் பைங்கிளி" எனவரும் முரண் அணிகள் பெரிதும் இன்பந்தருதலுணர்க. மேலும் இதன்கண் தோழியின் படைத்துமொழி மிகமிக நுணுக்கமும் இனிமையும் உடையதாதலும் உணர்க. வாய்த்தனை - உண்மை கூறிவிட்டனை.

    இனி, இச் செய்யுளை ஆசிரியர் இளம்பூரணர் "மறைந்தவற்காண்டல்" என்னும் நூற்பாவின்கண் "களவு அறிவுறினும்" என்னும் துறைக்கு எடுத்துக்காட்டினர். எனவே இதனை அவர் தலைவி கூற்றாகவே கொண்டனர் என்பது தேற்றம். அங்ஙனம் ஆயின் அவர் தலைவி கூற்றாதற்கேற்ற பாடபேதங் கொண்டவர் ஆதல் வேண்டும். ஆயினும் இற்றைநாள் கிடைத்துள்ள அச்சுச்சுவடியில் பாடபேதங் காணப்பட்டிலது. இஃது ஆராய்ந்து கொள்ளற்பாலது.

(147)