பக்கம் எண் :


257


அழகிய பக்கத்திலே பொருந்தி வளைந்த வில்லையுடைய வீரர் மிக்கிருக்கின்ற நிலைமையைநோக்கியும் அச்சங்கொள்ளாது; கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் இன் புனிற்று இடும்பை தீர - மலைமுழையிலே கிடந்த பெரிய உகிரையுடைய பெண்புலியின் இனிய குட்டிகளை ஈன்றதனாலாகிய நோயும் பசியும் தீரும்படியாக; சினம் சிறந்து செங்கண் கோள்வல் இரும்புலி ஏற்றை - சினமிகுத்துச் சிவந்த கண்ணையுடைய கொல்லவல்ல பெரிய புலியேற்றை; உயர் மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும் அருஞ்சுரம் இறப்ப - ஓங்கிய கொம்பினையுடைய களிற்றியானையின் புள்ளி யமைந்த முகத்திலே சென்று பாயாநிற்கும் செல்லுதற்கரிய சுரத்தின்கண்ணே செல்லாநிற்பர்; வருந்தேன் - அவர் செல்லுவதனை அறிந்த யான் சிறிதும் வருந்துவேனல்லேன், நீயும் அவ்வண்ணம் வருந்தாதே கொள்; அவர் செலவு வாய்க்க - அவர் செல்லுங் காரியம் அவர்க்குக் கைகூடுவதாக! எ - று.

    (வி - ம்.) ஆள்வினை - முயற்சி : இறைச்சியாலே பொருள்வயிற் பிரிந்தமை தோன்றுதலின் பொருளில்முயற்சி கொண்டதெனக் கூறப்பட்டது. என்ப: அசைநிலை.

    சுரத்தின்கண் உடன்வரின் ஆற்றவல்லளோவென்னுங் கருத்தால் வண்ணம் நோக்கினன் என்றாள். நின்னைப் பிரிதலாற்றாது அவனும் அழுங்கி உரையாடவல்லனல்ல னென்பாள் மென்மொழி கூறியுமென்றாள்.

    இறைச்சி :- பிணவின் பசியும் நோயுந் தீர்க்கவேண்டி மறவர்க்கும் அஞ்சாது ஆண்புலி களிற்றின் முகம்பாயுமென்றது, நின்னொடு முட்டின்றி இல்லறநிகழ்த்தக் கொடிய சுரத்தினையுமஞ்சாது சென்று பொருளீட்டிவரச் செல்லாநிற்பரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) இச் செய்யுளைப் பொருள்வயிற்பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலத்துக் கொடுநெறிக்கண் என்படுவனோ? என்று கவன்ற தலைவிக்குத் தோழி நம் பெருமான் இற்றை நாளே அவ்வருஞ் சுரத்தைக் கடந்து விடுவர் என்று உடன்போய் மீண்டோர் கூறக்கேட்டேன் அதனால் யானும் அவரைப்பற்றி வருந்தாதிருக்கின்றேன் நீயும் வருந்தாதே கொள் எனக் கூறி ஆற்றுவித்தாகக் கோடல் நன்று. இன்றே அருஞ்சுரம் இறப்ப என்றதனால் நாளை தொடங்கி அவர் வளஞ்சிறந்த வேற்றுநாட்டின்கண் இனிதுறைந்து பொருளீட்டுபவர் ஆவார் என்பது குறிப்பாயிற்று, பொருளீட்டுதல் இல்லறத்திற்கு ஆக்கமாகலின் அம்முயற்சிக்கு நாமும் ஒத்திருத்தலே நங்கடமை ஆதலின் நாம் அவரை வாழ்த்தி ஈண்டு ஆற்றியிருப்பேமாக! என்பாள் அவர் செலவு வாய்க்க! என்று வாழ்த்தினள் என்க.

(148)
  
    திணை : நெய்தல்.

    துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது.