(து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாதலையறிந்த தோழி, அவன் கேட்டு உடன்கொண்டுசெல்லவாவது வரைந்துகொள்ளவாவது கருதும்படியாகத் தலைவியை நோக்கி ஊரார் அலர் தூற்றலாலே அதனையறிந்த அன்னை ஒறுப்ப யான் வருந்துகின்றேனாதலால் கொண்கனோடு நீ செல்லுமாறு கருதுகின்றேன். அங்ஙனம் சென்றபிறகு இவ்வூர் யாது செயற்பாலது? வேண்டுமேல் அலர்கொண்டொழிகவென வருந்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "அனைநிலைவகை" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க. இனி முற்கூறிய விதியும் அமையும் எனக் கோடலுமாம். முன்னைவிதி தலைவன் தலைவியை உடன்கொண்டு செல்லுதற்பொருட்டுக் கூறியதெனற்கும், இவ் விதி வரைந்து கோடற்குக் கூறியதெனற்கும் ஆமென்க. (உரை இரண்டற்கும் ஒக்கும்.)
| சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி |
| மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி |
| மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் |
| சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப |
5 | அலந்தனென் வாழி தோழி கானல் |
| புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் |
| கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ |
| நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு |
| செலவயர்ந் திசினால் யானே |
10 | அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே. |
(சொ - ள்.) தோழி வாழி மறுகின் பெண்டிர் சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி - தோழீ! வாழி! நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களுள் ஓரோ வோரிடத்திற் சிற்சிலரும் ஒரோ வோரிடத்திற் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி; மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி அம்பல் தூற்ற - வியப்புடையார்