(து - ம்,) என்பது, தலைவன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி தன்னெஞ்சம் எப்பொழுதும் அவன்பாற் சென்றமையும் தன் தனிமையும் குறிப்பாற் கூறுவாள் 'எழிலி சென்றாற்போல என்னெஞ்சம் அவர்பாற் சென்றொழிந்ததனாலே தனிமகன்போன்று என்னுடம்பு இங்கிருக்கலாகிய'தென வருந்திக்கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "ஆவயின் வரூஉம் பல்வேறு நிலை" (தொல். கற். 6) என்பதன்பாற் படுத்துக.
| குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி |
| மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர் |
| செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும் |
| தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி |