பக்கம் எண் :


264


    திணை : நெய்தல்.

    துறை : இது, மடல்வலித்த தலைவன் முன்னிலைப்புறமொழியாகத் தோழிகேட்பச் சொல்லியது.

    (து - ம்,) என்பது, இரந்துகுறைபெறாது மடலேறுமாறு கருதிய தலைமகன் தோழியின் முன்னிலையில் வேறொருவருடன் கூறுவான் போன்று காமம் மடலைத் தந்தது; அலர் பலமிடைந்த எருக்கலரைத் தந்தது; ஞாயிறு துன்பைத் தந்தது; இரவு கையறவைத் தந்தது; ஆதலின், யான் இனி எவ்வண்ணம் உய்குவேனென அத்தோழி கேட்டுத் தன்குறை முடிக்கும்படியாக அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, "மெய்தொட்டுப் பயிறல்" (தொல். கள. (11)) என்னும் நூற்பாவின்கண் வரும் "மடன்மா கூறு மிடனுமா ருண்டே" என்னும் விதி கொள்க.

    
மடலே காமந் தந்தது அலரே 
    
மிடைபூ எருக்கின் அலர்தந் தன்றே 
    
இலங்குகதிர் மழுங்கி எல்விசும்பு படரப் 
    
புலம்புதந் தன்றே புகன்றுசெய் மண்டிலம் 
5
எல்லாந் தந்ததன் தலையும் பையென 
    
வடந்தை துவலை தூவக் குடம்பைப் 
    
பெடைபுணர் அன்றில் உயங்குகுரல் அளைஇக் 
    
கங்குலும் கையறவு தந்தன்று 
    
யாங்கா குவென்கொல் அளியேன் யானே. 

    (சொ - ள்.) காமம் மடல் தந்தது - யான் கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது; அலர் பூ மிடை எருக்கின் அலர் தந்தன்று - ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது; புகன்று செய் மண்டிலம் எல்விசும்பு படர இலங்கு கதிர் மழுங்கி புலம்பு தந்தன்று - எல்லாம் விரும்புதலைச் செய்கின்ற ஆதித்த மண்டிலமோ தன்னொளி விசும்பின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; எல்லாம் தந்ததன் தலையும் - முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; பை என வடந்தை துவலை தூவ - மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; குடம்பைப் பெடை புணர் அன்றில் இயங்கு குரல் அளைஇ - கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக்கொண்டு;