(து - ம்.) என்பது, தலைவன் பொருள்வயிற்பிரிந்து மீண்டுவந்ததனை ஏனைய உழையர் முதலாயினோராலறிந்த தோழி, தலைவியை நெருங்கி 'அவர் கடுங் கோடையிலே சென்றனராயினும், நல்லதே செய்தாரென்று கூறி நான் முன்பு தெளிவிப்ப நீ தெளிந்தாயல்லை; அங்ஙனம் நீ வருந்துவதனைப் போக்குமாறு அவர் குறித்த பருவத்திற்றைநாளா லிங்குவந்தனர் கா'ணென கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் வரும் 'எதிரும் உளப்பட பிறவும்' என்பதனால் அமைத்துக் கொள்க.
| உறைதுறந்து இருந்த புறவின் தனாது |
| செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் மண்பக |
| உலகுமிக வருந்தி அயாவுறு காலைச் |
| சென்றனர் ஆயினும் நன்றுசெய் தனரெனச் |
5 | சொல்லில் தெளிப்பவுந் தெளிதல் செல்லாய் |
| செங்கோல் வாளிக் கொடுவில் ஆடவர் |
| வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென |
| வெங்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ |
| உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது |
10 | மாறுபுறக் கொடுக்கும் அத்தம் |
| ஊறிலர் ஆகுதல் உள்ளா மாறே. |
(சொ - ள்.) உறை துறந்து இருந்த புறவில் தனாது செங்கதிர்ச் செல்வன் தெறுதலின் - தோழீ! மழைபெய்யாதொழிந்த பாலைநிலத்தின்கண் அந் நிலத்தின் தெய்வமாகிய ஆதித்தன் காய்தலானே; மண்பக உலகு மிக வருந்தி அயாவுறுகாலை - நிலம் பிளவுபட அதனால் உலகம் மிகவருந்தித் துன்புற்ற காலத்து;