பக்கம் எண் :


285


சென்றனர் ஆயினும் - தலைவர் பொருள்வயிற் பிரிந்து அந்நிலத்துள்ள நெறியின்கண்ணே சென்றனராயினும் அவர் பொருள்மேற் சென்றாராதலின்; நன்று செய்தனர் எனச் சொல்லில் தெளிப்பவும் - நல்லதொரு காரியத்தையே செய்தனரென்று என்னுடைய சொற்களால் நின்னைத் தெளிவித்தகாலையும்; கொடுவில் ஆடவர் செங்கோல் வாளி வம்ப மாக்கள் உயிர்த்திறம் பெயர்த்தென - வளைந்த வில்லையுடைய ஆறலைகள்வர் செம்மையுற்ற கோல்வடிவாகிய அம்பினாலே நெறியின்கண்ணே செல்லும் ஏதிலாளரைக் கொன்று உயிரைப் போக்கினமையாலே; வெம்கடற்று அடைமுதல் படுமுடை தழீஇ - இறந்து கிடந்த பிணங்கள் கொடிய மலைநெறியின் மருங்கே இலைகளால் மூடப்பட்டு முடைநாற்ற மிகுதலும்; உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாதுமாறு புறக்கொடுக்கும் - அவற்றைத் தின்ன வந்த மிக்க பசியையுடைய குறிய நரி அம் முடை நாற்றம் பொறாமையால் அவ்விடத்து நெருங்காது பின்னே மீண்டு செல்லாநிற்கும்; அத்தம் ஊறு இலர் ஆகுதல் உள்ளாமாறு - சுரத்தின்கண் யாதுமோர் ஊறுபாடிலராய் வருதலை நினையாமையாலே நீ; தெளிதல் செல்லாய் - யான் கூறிய வார்த்தைகளினாலே தெளிவடைந்தாயில்லை; அவ்வண்ணம் நீ வருந்தியிருப்பது அறிந்தனர் போலும், அவர் குறித்த இப் பருவத்து இற்றைநாளால் இங்கு வந்தனர்காண்; எ - று.

    (வி - ம்.)உறை - மழை. உலகு - பாலைநிலமுமாம். வாளிக்குச் செம்மை குருதிபடிதலால். கோல்வாளி: இருபெயரொட்டுமாம். தழீஇ யென்பதனைத் தழுவவெனத் திரிக்க. கூறுவோர் தோழியெனவும் கேட்போர் தலைவி யெனவுங் கொள்ளவைத்தலின் "இவ்விடத்திம்மொழி யிவரிவர்க் குரியரென, றவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம் (தொல். பொ. 520) என்றபடி இது முன்னமென்னும் உறுப்புப்பெற்று வந்ததாயிற்று.

    இறைச்சி :- வேடர்கொன்றொழித்த பிணத்தைத் தின்னவந்த நரி, அதன்கட்பட்ட முடைநாற்றத்துக்கு அஞ்சி உண்ணாது பெயர்ந்தேகும் என்றது, தலைவர் நின்னைப்பிரிந்தவிடத்து வருந்தியிருந்த நின்னவனை யுண்ணவந்த பசப்பு, அவர் விரைவின் மீண்டுவந்து நினக்குச் செய்யுந் தலையளியை நோக்கியவுடன் நினது நலனையுண்ணாது அஞ்சிக் கரந்தொழியுமென்றதாம்.

     மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) பாலைக்குத் தெய்வம் ஆதலின் செங்கதிர்ச் செல்வனை அதன் உடைமை யாக்கித் தனாது செங்கதிர்ச் செல்வன் என்றாள். செங்கோல் வாளிக்கொடுவில் ஆடவர் என்புழிச் செய்யுளின்பமுணர்க. கடறு - காடு. உறுபசி - மிக்கபசி. மாறு - ஏதுப்பொருள்படவருமோரிடைச்சொல்.    (164)