(து - ம்.) தலைவன் வினைவயிற்செல்லுங் குறிப்பறிந்து தலைவி வேறுபடக் கண்டு அவளைத் தேற்றுகின்றான். 'மடந்தாய், நின் வடிவழகு கண்டு அகமகிழ்ந்து யானும் அறத்தினிலை கைவரப்பெற்றோர் போன்றேன்; புதல்வனும் விளையாடல் பயிலுகின்றான்; நுங்களை எதிர்நோக்கி மகிழ்வதினும் சிறந்த பொருளில்லையாதலின், வேறுவினை யாதுமில்லேன்; இங்ஙனமாக ஏற்றினாற் பிரிகிற்போம்; பிரிவதேயில்லைக்கா'ணெனத் தெளியக்கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, "பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும்" என்னும் விதிகொள்க. பிரிவு பொதுப்படக் கூறினமையின் பரத்தையிற் பிரிவு முதலிய எல்லாப் பிரிவிற்கும் இவ்விதி அமையும் என்க.
| பொன்னும் மணியும் போலும் யாழநின் |
| நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும் |
| போதும் பணையும் போலும் யாழநின் |
| மாதர் உண்கணும் வனப்பின் தோளும் |
5 | இவைகாண் தோறும் அகமலிந்து யானும் |
| அறநிலை பெற்றோர் அனையேன் அதன்தலைப் |
| பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் |
| வினையும் வேறுபுலத்து இலனே நினையின் |
| யாதனிற் 1 பிரிவாம் மடந்தை |
10 | காதல் தானுங் கடலினும் பெரிதே. |
(சொ - ள்.) மடந்தை பொன்னும் மணியும் போலும் நின் நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும் - மடந்தாய்! பொன்னைப் போலும் ஒளிவீசுகின்ற நினது நல்ல வடிவும், நீலமணியைப் போலும் (நிறமமைந்த) மணங்கமழ்கின்ற நின் கரிய கூந்தலும்; போதுபோலும் நின்மாதர் உண்கணும் - குவளை மலரைப் போலும் அழகிய மையுண்ட நின்கண்களும்; பணைபோலும் வனப்பின் நின் தோளும் - மூங்கிற் போத்தினைப்போலும் அழகையுடைய நின் தோள்களும்; இவைகாண்தோறும் யானும் அகம்மலிந்து அறம் நிலை பெற்றோர் அனையேன் - ஆகிய இவற்றைக் காணும் பொழுதெல்லாம் யானும் உள்ளம் மகிழ்ந்து அறத்தின்கண்ணே நிலைபெற்றோர் அடையும்