(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்த தலைவனாலே தலைமகளது புலவியைத் தீர்க்குமாறு விடப்பட்ட விறலியைக் கண்ட தோழி, அதனை அறிந்துவைத்தும் இவ் விறலியே தூதாகநடந்து தலைவனைப் பரத்தையிடத்துச் சேர்ப்பித்தனளாகுமென்னுங் கருத்தாலே ஆயத்தாரை நோக்கி 'இவ் விறலி நம் தலைவனை மற்றுமொரு பரத்தைபாலுய்க்க வந்தனளாதலின், நாம் அவனைக் காத்துக்கொள்வோம்; எழுவீராக, இவள் கருத்து முற்றுமெனின் நாமிருந்தாவதென்'னென வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர், பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.
| மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள் |
| வார்ந்தவால் எயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கின் |
| பிணையல் அம்தழைத் தைஇத் துணையிலள் |
| விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே |
5 | எழுமினோ எழுமின்எங் கொழுநற் காக்கம் |
| ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் |
| பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது |
| ஒருவேற்கு ஓடி யாங்குநம் |
| பன்மையது எவனோஇவள் நன்மைதலைப் படினே. |
(சொ - ள்.) மடக் கண் தகரக் கூந்தல் பணைத்தோள் - மடப்பத்தையுடைய கண்பார்வையையும் மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையும் பருத்த தோளையும்; வார்ந்த வால் எயிற்றுச் சேர்ந்து செறி குறங்கின் - நேர்மையாகிய வெளிய பற்களையும் திரண்டு நெருங்கிய துடைகளையுமுடைய; துணை இலள் பிணையல் அம் தழைத் தைஇ விழவுக் களம் பொலிய வந்து நின்றனள் - ஒப்பில்லாத இவ் விறலி பிணைத்த அழகிய தழையுடையையுடுத்துத் திருவிழாச் செய்யும் இவ்விடனெங்கும் பொலிவெய்துமாறு வந்து நிற்றலாயினள் காணுங்கோள்!; எம் கொழுநன் காக்கும் - நம் காதலனை இன்னும் வேறொரு பரத்தைபால் இவள் தூது சென்று செலுத்தாதபடி நாம் பாதுகாக்கற் பாலம்; எழுமின் எழுமின் - எழுங்கோள்! எழுங்கோள்!, இவள் நன்மை தலைப்படின் - இவள் கொண்ட காரியம் கைகூடுமாயினோ!; ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலர் உடன் கழித்த ஓள்வாள் மலையனது -