| கழுதுகால் கொள்ளும் பொழுதுகொள் பானாள் |
10 | ஆர்வ நெஞ்சமொடு அளைஇ |
| மார்புறப் படுத்தல் மரீஇய கண்ணே. |
(சொ - ள்.) நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை - நீருண்ணும் நசையை மேற்கொண்ட வருத்தத்தையுடைய பிடியானை; வேனில் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் நிலம் செல - வெப்பமிக்க சிறுகுன்றுகளைச் சூழவுடைய வெவ்விய மலைப்பக்கத்திலுள்ள நிலத்தின்கண்ணே செல்லுதலும்; செல்லாக் கயம் தலைக்குழவி - அதனுடன் செல்லமாட்டாத மெல்லிய தலையையுடைய யானைக் கன்று; சேரி அப் பெண்டிர்நெஞ்சத்து எறிய ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் - சேரியிலுள்ள மாதர் தம்முள்ளத்தே துண்ணெனும்படி ஊரிலுள்ள பசுவின் கன்றொடு சேர்ந்து அச் சேரியின் கண்ணே புகுதாநிற்கும்; நாடன் நம்விட்டு பல்மலை அருஞ்சுரம் இறப்பின் - மலைநாடன் நம்மைக் கைவிட்டுப் பலவாகிய மலைகளிடைப்பட்ட கடத்தற்கரிய சுரநெறியிலே செல்லின்; வினைப்பூண் தெள்மணி வீழ்ந்தன ஞாங்கர் நிகர்ப்ப - கட்டிய கம்மத் தொழிலையுடைய தெளிந்த ஓசையையுடைய மணிகளைக் களையப்பட்ட வேற்படையையொப்ப; கழுது கால்கொள்ளும் பொழுது கொள்பால் நாள் - பேய்கள் நிலைகொண்டு உலாவுகின்ற பொழுது அமைந்த நடுயாமத்தில்; ஆர்வ நெஞ்சமொடு அளைஇ மார்புஉறப்படுத்தல் மரீஇய கண் - ஆசையோடு நெஞ்சுகலந்து அவனுடைய மார்பின் மேல் நெருங்கப் படுத்தலைப் பொருந்தின கண்கள்; யாங்கு வல்லுந - இனி எவ்வாறு துயிலல் வல்லனவாகும்? எ - று.
(வி - ம்.)ஞாங்கர்: வேல், நிகர்ப்ப மரீஇய கண்ணெனக் கூட்டுக.
உள்ளுறை :-யானை மலைப்பக்கம் போதலும் அதன் கன்று சேரியம் பெண்டிர் நடுங்கும்படி ஊரான் கன்றொடு புகுமென்றது, தலைவன் பொருள்வயிற் பிரிந்துபோதலும், ஏவன்மாந்தர் தாம் இறைமகள் எவ்வண்ணம் ஆற்றுங்கொலென்று வருந்தாநிற்ப, தலைவி என்னொடு வைகுதலாவாளென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்திருத்தல்.
(பெரு - ரை.) யானை செல்ல, செல்லாக் குழவி ஊர் ஆன்கன்றொடு புகுதும் என்றது, தலைவன் இன்றியமையாத தன் கடமைமேற்சென்றானாகலின் அவனொடுஞ் செல்லமாட்டாத நீ இனி அவன் வருங்காறும் ஆயத்தாரோடு கூடி ஒருவாறு துயர் தீர்ந்துறைதல் வேண்டும் என்று உள்ளுறை கூறியபடியாம். இதனுள் சேரியம் பெண்டிர் நெஞ்சத்து எறிய என்றது நீ அவ்வாறு இனிதிருப்பின் அலர் தூற்றுவோர் அதற்கு ஏதுப் பெறமாட்டாது - வருந்துவர் அவர்க்கு அதுசாலும் என்றவாறாம்.
(171)