பக்கம் எண் :


3


     ஆக, ஆக, ஆக, ஆக, ஆகப் பயின்று அடக்கிய முதல்வனெனக் கூட்டுக. ஆன்றோர்: தோன்றா எழுவாய். இருவகை வாழ்த்தினுள் இது தனக்குப் பயன்பட வாழ்த்தியது.

     (பெருமழைப்புலவர் ஆய்வுரை) இது "பிறன் கோட் கூறல்" என்னும் தந்திரவுத்தி; என்னை? ஆசிரியர் பெருந்தேவனார் "இறைவனே மாயையாகவும் உயிர்களாகவும் பரிணமிப்பன்" என்னும் வைணவர் கூறும் பரிணாம வாதம் தமக்குடன் பாடாகாதிருந்தும் அவர் சமயக் கடவுளாகக் கொள்ளப்பட்ட திருமாலுக்கு அவர் மதமே பற்றி மாநிலஞ் சேவடியாகத் தூநீர்ப்பௌவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசை கையாக மதியமொடு சுடர் கண்ணாக இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் என்ப என்றார் என்க. வைணவர் "இறைவனே மாயையும் உயிர்களுமாய்ப் பரிணமிப்பன்" என்னும் கொள்கையுடையாராதலை,

  
"மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி 
  
 மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி 
  
 மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை 
  
 மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்ப னன்றே" 

எனவரும் செய்யுளானும் உணர்க; (சிவஞான சித்தியார் பரபக்கம்: பாஞ்சயாத்திரி மதம். 7) இனி, செய்யுட் கருத்தோடு,

  
"அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்  
  
 ஏம மார்ந்து நிற்பிரிந்தும் 
  
 மேவல் சான்றன எல்லாம்" 

எனவரும் பரிபாடலையும் (4-33-5)

  
"திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை 
  
 படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் 
  
 உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்" 

எனவரும் திருவாய் மொழியையும் (1 : 7) ஒப்பு நோக்குக.

     இனி, இவ்வாசிரியர், ஆசிரியர் தொல்காப்பினார் "மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும்" என்று கூறிய முறைபற்றி அகப்பொருட் டொகைநூல்களுள் முதலாவதாகிய இந் நற்றிணைக்கு மாயோனையும் இரண்டாவதாகிய குறுந்தொகைக்குச் சேயோனையும் வாழ்த்தி வேந்தன் முதலிய ஏனைத் திணைத் தெய்வங்களை உலகத்தோர் முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடும் வழக்கமின்மையின் எஞ்சிய வாழ்த்துக்களைத் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமான் வாழ்த்தாகவே இயற்றியிருத்தலும் நுண்ணிதின் உணர்க. இதனால், இவர் சமயம் சைவம் ஆகும் என்பதும் இந்நூலின்கண் திருமாலைத் திணைத்தெய்வமாதல் பற்றி அச் சமயத்தார் கொள்கையையே மேற்கொண்டு வாழ்த்தினர் என்பதும் உணர்க. இனி, இயன்ற எல்லாம் பயின்று என்பதற்கு அம்மாநிலத்தே இயன்ற உயிரெல்லாம் தானேயாகிப் பயின்று என்னல் சிறப்பாகும். வேதமுதல்வன் என்றதற்கு வேதத்தை அருளிச்செய்த முதல்வன் என்பது பொருந்தும்.