(து - ம்.) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைவன்கேட்டு வரைவொடு புகுமாற்றானே தோழி தலைவியை இல்வயிற்செறித்தமையை அறிவுறுத்துவாளாய்த் "தலைவனது தேரையும் பார்க்கமுடியாதாயிற்று, நாண்மிகுதலாலே துயிலவும் இல்லை. என்நெஞ்சும் அழிந்த"தென்று கூறி உள்ளுறையாலே தலைவியினுடைய ஏனைய நிலைமையுங் கூறி வரைவுகடாவாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும் ......................... அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியினால் அமைத்துக்கொள்க.
| ஆடமை ஆக்கம் ஐதுபிசைந்து அன்ன |
| தோடமை தூவித் தடந்தாள் நாரை |
| நலனுணப் பட்ட நல்கூர் பேடை |
| கழிபெயர் மருங்கின் சிறுமீன் உண்ணாது |
5 | கைதையம் படுசினைப் புலம்பொடு வதியும் |
| தண்ணந் துறைவன் தேரே கண்ணின் |
| காணவும் இயைந்தன்று மன்னே நாணி |
| நள்ளென் யாமத்துங் கண்படை பெறேஎன் |
| புள்ளொலி மணிச்செத்து ஓர்ப்ப |
10 | விளிந்தன்று மாதவத் தெளிந்தஎன் நெஞ்சே. |