(து - ம்.) என்பது, தலைவன் வினைவயிற்செல்லுங் குறிப்பை யறிந்த தலைமகள், தோழியை நெருங்கி "நம் காதலர் சுரம்போதலைத் துணிந்தனரென்பது திண்ணம்; வேலைத்துடைப்பர், பலகையணிவர், என்னையும் அளிப்பர் ஆதலின், யாம் துன்பவெள்ளத்தில் நீந்தியுழலு நாள்வந்து எய்தியது போலு"மென அழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""கொடுமையொழுக்கம்.........................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்"" (தொல். கற். 6) என்னும் விதியான் அமைத்துக் கொள்க.
| பரந்துபடு கூரெரி கானம் நைப்ப |
| மரந்தீ உற்ற மகிழ்தலை அம்காட்டு |
| ஒதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர் |
| குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட |
5 | வேலும் இலங்கிலை துடைப்ப பலகையும் |
| பீலி சூட்டி மணியணி பவ்வே |
| பண்டினும் நனிபல அளிப்ப இனியே |
| வந்தன்று போலுந் தோழி நொந்துநொந்து |
| எழுதெழில் உண்கண் பாவை |
10 | அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. |
(சொ - ள்.) தோழி பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப மரம் தீ உற்ற மகிழ்தலை அம் காட்டு - தோழீ! நம் காதலர் பரந்து பட்ட மிக்க தீ காடு முழுதும் எரிந்து அழித்தலினால் அதனிடையிருந்த மரங்களெல்லாம் தீந்து மகிழ்ச்சி நீங்கலாகிய காட்டகத்து; ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் - ஒதுங்கியிருத்தற்கும் நிழலில்லாத கொடிய சுரத்தின்கண்ணே சென்று விட்டனர் என்பது திண்ணம்; மற்றவர் குறிப்பின் யான் கண்டிசின் - அவர் செய்யுஞ் செய்கையின் குறிப்பினால் யான் கண்டறிந்தேன்மன்; நெறிப்பட வேலும் இலங்கு இலை துடைப்ப - யாங்ஙனம் அறிந்தனையென நீ வினவுதியேல் இயம்புவன்கேள் ! ஒழுங்குபட வேலின் இலங்கிய இலையையும் மாசுபோகத் துடையா நிற்பர்; பலகையும் பீலி சூட்டி மணி அணிய - அன்றிக் கிடுகினையும் மயிற்பீலி சூட்டி மணியை அணியாநிற்பர்; பண்டினும் நனி பல அளிப்ப - மற்றும் முன்போலன்றி என்னையும் பலபடியாகப் பாராட்டி அன்புசெய்யாநிற்பர்; நொந்து நொந்து எழுது