போல அரும்புகள் பொதிந்தனவெல்லாம் மலர்ந்த ஒள்ளிய செங்காந்தள்; வாழை சிலம்பின் வம்பு பட - வாழையையுடைய சிலம்பின்கண் மணங்கமழாநிற்ப; யாழ் ஓரத்து அன்ன இன்குரல் இன வண்டு - யாழோசையைக் கேட்டாலொத்த இனிய குரலையுடைய கூட்டமாகிய வண்டுகள்; குவைஇ அருவி முழவின் பாடொடு ஒராங்கு மெல்மெல இசைக்குஞ் சாரல் - திரண்டு புகுந்து அருவியாகிய முழவொலியோடு ஒருதன்மைப்பட மெல்ல மெல்ல ஒலியாநிற்கும் சாரலிலே; குன்ற வேலித் தம் உறைவின் ஊர் - குன்று சூழ்ந்து வேலியாகயுடைய அவர்கள் இருக்கின்ற ஊரிலுள்ளார்; அவட்கு அவள் காதலள் என்னுமோ உரைத்தி சின் - தலைவிபால் அப் பரத்தை மிக்க காதலையுடையளாதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள் என்று கூறாநிற்பரோ? ஆராய்ந்து ஒன்றனைக் கூறாய்; அங்ஙனம் ஆயின் மீட்டும் அவனை ஈங்கு நமது ஆற்றலானே கைக்கொண்டு போதுவாங்காண்!. எ - று.
(வி - ம்.)பரத்தை தான் தோழியென விளித்தலால், அவட்குத் தோழி விறலியென்பது. விறல் - சத்துவம்; அவை சிங்காரமுதலாய ஒன்பான் சுவையாமென்ப. அச்சுவைகள் தன் மெய்க்கண்ணே தோன்றுமாறு அவிநயத்திற் புலப்படுத்திக் காட்டவல்லவள் விறலி. உறைவி - உறைபவள். நலத்தோன் அளித்தல்: இரண்டன்றொகை. குவைஇ - திரண்டு. அங்ஙனமாயினென்பது முதற் குறிப்பெச்சம்.
உள்ளுறை :-சிலம்பிலே செங்காந்தள் மலர்தலும் வண்டுகள் அருவியொலியொடு சேர மெல்லமெல்லப் பாடாநிற்குமென்றது, தலைவியொடு தலைவன் மகிழ்ந்திருப்பானாதலின் நாம் முழவு முதலியவற்றோடு பாடுகிற்போம்; அவன் நம் வயத்தவனாவானென்பதாம். ""ஏனோர்க்கெல்லாம் இடம்வரை வின்றே"" (தொல். பொ. 302) என்றதனாலே பரத்தை தானறிந்த கிளவியானே நிலம்பெயர்ந்துறையாத பொருள் கொண்டு உள்ளுறை கூறினாளென்பது. மெய்ப்பாடு - வெகுளி. பயன் - பரத்தை சூழ்தல்.
(பெரு - ரை.) இனி இச் செய்யுளின்கண் ஊர் அவட்கு அவள் காதலள் என்னுமோ என்றதற்கு, இவ்வூரிலுள்ளார் அப் பரத்தையினும் காட்டில் அத் தலைவியே சிறந்த காதலையுடையாள் என்று கூறுவரோ? என்று பொருள்கோடலே சிறப்பு. இங்ஙனமின்றி ""தலைவிபால் அப்பரத்தை மிக்க காதலையுடையாள் ஆதலின் அத் தலைவி விருப்பத்தின்படி தலைவனை விடுத்தனள்"" எனல் பரத்தைக்குப் புகழே பயத்தலின் அவ்வுரை பொருந்தாமை யுணர்க. இனி, தலைவி எம்மை நயந்து உறைபவளாதலின் யாம் நயந்தே தலைவனை நல்கினம் நலத்தோனும் அவள்பால் காதலின்றியே தன் சால்புடைமையான் அளிப்பவன் ஆகின்றான்; இதனை அறியாது இவ்வூர் அவனுக்கு அப் பரத்தையினும் அத் தலைவியே சிறந்த காதலள் என்னுமோ? யாம் விட்டது என்னாம்? உரை! என்று இச் செய்யுட்குப் பொருள்காண்டலே தகுதியென்க.
(176)