(து - ம்.) என்பது, தலைவன் பிரிதலால் மெலிந்த தலைவியைத் தோழிநோக்கிக் "காட்டிலே சென்ற நம் தலைவர் இன்னும் வந்திலரேயென நீ வருந்தா தொழி, இதுகாறும் வாராராயினும் கங்கை வங்கம் போகுவர்கொல்? வேறெவ்வினை செய்வர்கொல்? ஓரிடத்தும் போகார்; ஒன்றுஞ்செய்யாராதலால், அவரின்னே வருகுவர்கா"ணென அவளாற்றுமாறு வலியுறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""பெறற்கரும் பெரும்பொருள்"" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்ப தன்கண் அமைத்துக்கொள்க.
| தம்மலது இல்லா நம்நயந் தருளி |
| இன்னும் வாரா ராயினுஞ் சென்னியர் |
| தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ் |
| நரம்பிசைத் தன்ன இன்குரல் குருகின் |
5 | கங்கை வங்கம் போகுவர் கொல்லோ |
| எவ்வினை செய்வர்கொல் தாமே வெவ்வினைக் |
| கொலைவல் வேட்டுவன் வலைபரிந்து போகிய |
| கானப் புறவின் சேவல் வாய்நூற் |
| சிலம்பி அஞ்சினை வெரூஉ |
10 | மலங்கல் உலவையங் காடிறந் தோரே. |
(சொ - ள்.) வெங் கொலைவினை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப் புறவின் சேவல் - கொடிய கொலைத் தொழிலில் வல்ல வேட்டுவனது வலையை அறுத்துவிட்டோடிய காட்டின்கணுள்ள சேவற்புறாவானது; வாய் நூல் சிலம்பி அஞ்சினை வெரூஉம் - தன் வாயில் உண்டாகும் நூலாலே கட்டிய சிலம்பியின் கோட்டையைக் கண்டு அஞ்சாநிற்கும்; மலங்கல் உலவையங்காடு இறந்தோர் - சுழன்றடிக்கின்ற சூறைக்காற்றையுடைய சுரத்தின் கண்ணே சென்ற தலைவர்; தம் அலது இல்லா நம் நயந்து அருளி இன்னும் வாரார் - அவரையன்றிச் சிறிதும் பொருந்தியிராத நம்மை விரும்பி அருள்செய்ய இன்னும் வந்திலர்; ஆயினும் - அங்ஙனம் வாராராயினும் வேறியாண்டைச் சென்றிருப்பர்?; சென்னியர் தெறல் அருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ் நரம்பு இசைத்து அன்னஇன்குரல் குருகின் - பாணர் தெறுகின்ற சினம் தணிதற்கரிய தெய்வத்தின் முன்பு சென்று அதன் சினமடங்குமாறு