பக்கம் எண் :


328


சிறிய யாழின் நரம்பினோசையை யெழுப்பிப் பாடினாலொத்த இனிய குரலையுடைய குருகுகளிருக்கின்ற; கங்கை வங்கம் போகுவர் கொல் - கங்கையாற்றின்கண் ஓடுகின்ற மரக்கலத்தேறி யாண்டேனுஞ் செல்லுகிற்பர் கொல்?; எவ் வினை செய்வர் கொல் - அவர் பிற எந்தச் செயலைச் செய்கிற்பர் கொல்? ஓரிடத்தும் போகலர் ; ஒரு செயலுஞ் செய்கலர்; ஆதலின் இன்னே வருகுவர் காண்; நீ வருந்தாதே கொள்? எ - று.

    (வி - ம்.)சென்னி - பிச்சையெடுக்கு மண்டைபோன்றதொரு கலம்; அதனையுடைமையிற் பாணர் சென்னியரெனப்பட்டார். சிலம்பி - சிலந்திப்பூச்சி. வங்கம் - கப்பல். சினை - சிலம்பியின் வயிற்றிலிருந்து வருநூலாலே அது கோட்டை செய்யப்படுதலால் சினையென்றார். ஓரிடத்துமென்பது முதற்குறிப்பெச்சம். அருளியென்பதை அருளவெனத் திரிக்க.

    காதலனுங் காதலியு மோருயிரினரென்பாள் தம்மலதில்லா நம்மென்றாள். இதனால் நீயின்றியும் அவரமையாராதலிற் பாணியாது இன்னே வருவாரென்பது.

    இறைச்சி :- வேட்டுவன் விரித்த வலையிலே சிக்குண்ட புறா, சிலம்பியின் சினைக்கு வெருவுமென்றது, முன்பு களவுக் காலத்துப் பல முறையும் இடையீடுபட்டுப் பிரிந்துறைதலாலே தலைவர் வருந்தியவராதலின் இவ்வினைவயிற் சென்றவர் பிரிவென்பதற்கஞ்சி இன்னே குறித்தபருவத்து வாராநிற்பரென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல்.

    (பெரு - ரை.) மலங்கல் - சுழலுதல். அலங்கல் எனக் கண்ணழிப்பின் அசைகின்ற உலவையங்காடு என்க.

(189)
    திணை : குறிஞ்சி.

     துறை : (1) இது, பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, குறையுறவறிந்த தோழி "இவனொரு குறையுடையான் போலும்" என ஆராய்ந்துணர நிற்குமிடத்துத் தலைமகன் தனது நெஞ்சம் குறை முடித்தல் வேண்டுமென்று முடிக்கக்கருதலும் அதனை நோக்கி நெஞ்சமே, கிடைத்தற்கரிய குறுமகள் இன்னகைக்கு மகிழ்ந்தோய், எஞ்ஞான்றும் கிடைக்கப்படாத பொருளை விரும்பியதனால் நீ இவ்வண்ணமே துன்பமெய்தி நெடுங்காலம் வாழ்ந்தொழிவாயாக"வென்று அழிந்து கூறாநிற்பது.

    (இ - ம்.) இதற்கு, ""தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறலும்"" (தொல். கள. 11) என்னும் விதிக்கொள்க.

     துறை : (2) அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம்.