(து - ம்.) என்பது, தலைவன் பிரிந்து வேற்றுநாட்டுச் சென்றபொழுது தலைவி வருந்துவதைக்கண்ட தோழி, அத்தலைமகளை நோக்கிப் பாலைவழிச் சென்ற தலைவர் நின் வருத்தம் நீங்கும்படி விரைவில் வாரா நிற்பரென ஆற்றுவிப்பது.
(இ - ம்.) இதனைப் "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவியெல்லாம் என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| பருவரல் நெஞ்சமொடு பல்பட ரகல |
| வருவர் வாழி தோழி மூவன் |
| முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற் |
| கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல் |
5 | தெறலருந் தானைப் பொறையன் பாசறை |
| நெஞ்ச நடுக்குறூஉந் துஞ்சா மறவர் |
| திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக் |
| கடாஅங் கழீஇய கதனடங் கியானைத் |
| தடவுநிலை யொருகோட் டன்ன |
10 | ஒன்றிலங் கருவிய குன்றிறந் தோரே |
(சொ - ள்.) தோழி வாழி - தோழீ ! நெடுங்காலம் வாழ்வாயாக!; மூவன் முள் எயிறு அழுத்திய கதவின் கானலம் தொண்டிப் பொருநன் - மூவனென்பவனைப் போரில் வென்று அவனது நிரம்பிய வலியையுடைய முட்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்துவைத் திழைத்த வாயிற் கதவினையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனாகிய; வேன் வேல் தெறல் அரு தானைப் பொறையன் - வெல்லும் வேற்படையையுடைய பகைவராற் கடத்தற்கரிய சேனையையுடைய சேரலன்கணைக்காலிரும் பொறையானது; பாசறை நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சாமறவர் - பாசறையின் கண்ணேயுள்ள நெஞ்சு நடுங்குகையாலே கண்ணுறங்காத வீரர் யாவரும்; திரை தபு கடலின் இனிது கண் படுப்ப - அலையோய்ந்த கடல்போல இனி தாகக் கண்ணுறங்குமாறு; கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் தடவுநிலை ஒருகோடு அன்ன - மதநீரொழிந்த சினந்தணிந்த யானையின் பெரிதாய் நிலைத்துள்ள ஒரு மருப்புப்போன்ற; ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோர் - ஒன்றாகி விளங்கிய அருவியையுடைய மலைநெறியிற் சென்ற தலைவர்; பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் - நீ வருத்தமுற்ற வுள்ளத்தோடு கொண்ட பலவாகிய கவலையும் நீங்க விரைவில் வருவர் காண்; எ-று.