பக்கம் எண் :


34


    (வி - ம்.) வருவர்கொல் என்ற பாடத்திற்குக் கொல் அசையெனக்கொள்க. படர்தல்-கருதுதல். முழுவலி - நிரம்பிய வலி. தடவு நிலை - பெரிதாய் நிற்றல். பகைவரை அட்டு அவர் பல்லைக் கொணர்ந்து தமது கோட்டைவாயிற் கதவில் வைத்துத் தைத்தல் பண்டை வழக்கு. இதனைக் "கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய, வன்கட் கதவின் வெண்மணி வாயில், மத்தி" (அகம். 210) என்ற செய்யுளானுமறிக, இதனுட் பொதிந்த கதை :-பொறையனது பாசறைக்கண்ணே ஒற்றைமருப்பையுடைய களிறொன்று, மதங்கொண்டு வீரர் துயிலாவாறு வருத்தி அப்பால் மதமடங்கிற்றென்பதாம். மறவர் இனிது கண்படுப்பக் கதனடங்கியானை யென்க. பருவரனெஞ்சமொடு பலபடர் என்றது அழிவில் கூட்டத்துப் பிரிவாற்றாமை. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தலைவியை ஆற்றுவித்தல். கைகோள் - கற்பு.

    (பெரு - ரை.) தடாஅநிலை ஒருகோட்டன்ன என்றும் பாடம். இதற்குப் பகைவராற் றடுக்கவொண்ணாத மறநிலையையுடைய என்று பொருள் கொள்க.

(18)
  
திணை : நெய்தல்.

துறை : இது, புணர்ந்துநீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, பகற்குறிவைத்துத் தலைவியைக் கூடிச் செல்லுந் தலைவனைத் தோழி நோக்கி 'இங்ஙனஞ் செல்லுவையாயின் மீண்டு நீ வருவதற்குள் இவள் இறந்துபடுமாதலால், அதற்கேற்றது செய்"யென வரைவுதோன்றக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் .... அனைநிலை வகையால் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்பதன்கண் வகை என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் 
    
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை 
    
பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்புமுதிர்பு 
    
நன்மா னுழையின் வேறுபடத் தோன்றி 
5
விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப !  
    
இனமணி நெடுந்தேர் பாக னியக்கச்  
    
செலீஇய சேறி யாயின் இவளே 
    
வருவை யாகிய சின்னாள் 
    
வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே. 

    (சொ - ள்.) இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல் சுறவுக் கோட்டு அன்ன முள் இலைத் தாழை - இறாமீனின்