அறிக. கரந்துறைவோரென்றதனாலே நெட்டிடைக்கழிந்தமை பெறப்பட்டது.
எங்குந் தெரிந்திருந்தும் அவருள்வழி எனக்குக் கூறாதிருத்தலின் அறிகரி பொய்த்தனை என்றாள். அங்ஙனம் பொய்த்தல் காரணமாகவன்றே நாளுந் தேய்ந்தொழிவாய் என்றாள். பொய் ஐம்பெரும் பாதகங்களுளொன்றாதலின் அஃது அமுதமுண்டு சாவாதிருப்போரையும் குறைத்துவிடும் என்பது அமுதகலையையுடைய நீ அழிந்தொழியுமதனாலே காணலாகியது என்றவாறு. அறிகரி பொய்த்தார்க்கு யாதும் கைகூடாதென்பது. மெய்ப்பாடு - அழுகை,. பயன் - அயாவுயிர்த்தல்.
(பெரு - ரை.) "பளிங்கு செறிந்தன்ன பல்கதிர்" என்றும் பாடம். இப்பாடமே சிறந்த பாடமுமாம். பளிங்கு செறிந்தமைந்தாற் போன்ற பலவாகிய கதிர் செறிந்து அவற்றிடையிடையே எனப் பொருள் கூறுக.
இனி, இதன் உரையில் உரையாசிரியர் விளக்கவுரையில் கூற வேண்டிய " என்று இரந்து வேண்டினாள்; அவள் அங்ஙனம் இரந்து வேண்டியுந் திங்கள் விடை கூறிற்றில்லையாகலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும்்அதனை நோக்கித் திங்களே" என்றும், இயலாதன்றே "என்றாள்" என்றும் இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கூறாமலும் தங்கூற்றேயாகக் கூறாமலும் முறைபிறழ்ந்து கூறியிருத்தல் உணர்க. இவற்றை விளக்கவுரைகளாகவே பிரித்துணர்ந்து கொள்க.
இனிச் இச்செய்யுள் உரையும் பொருந்தியதாகக் காணப்படவில்லை, எனவே இச்செய்யுட்கு.
"பலவாகிய கதிர்களையும் இடையிடையே பால்முகந்தன்ன பசு வெண்ணிலவினையும் உடையச் செல்வச் செருக்குடைமையால் மயங்கி எம்மனோர் இடர் அறியா நிறையுறு மதியமே நீதானும் சால்பும் செம்மையும் உடையை ஆதலின் நினக்கிந்தப் பொச்சாப்பு ஆகுமோ? ஆகாதன்றே! அஃதுண்மையின் எற் கரந்துறைவோர் உள்வழி காட்டாய்; ஆதலின் நீ அறிகரி பொய்த்தாய்; அங்ஙனம் பொய்த்தலின் நீ என் தோள்போல் நாடோறும் சிறுகுபு சிறுகுபு வானத்தினூடே செரித்தொழியக்கடவாய்!" என்று பொருள் கூறிக்கொள்க. இப்பொருட்கு, மால்பு இடர் அறியா எனக் கண்ணழித்துக் கொள்க, மால்பு - மயங்கி. செரீஇ; வியங்கோள். செரித்தல் - சீரணித்தழிதல். அது என்றது அப்பொச்சாப்பு என்றவாறு. அஃதாவது செல்வச் செருக்கால் கடமை மறந்துவிடல். திங்கட்குச் செல்வம் கதிர் உடைமையும் ஒளியுடைமையும் ஆமென்க.
(196)
திணை : பாலை.
துறை : ,இது, வரைவுநீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.
(து - ம்.) என்பது, வரைந்துகோடல் காரணமாகச் சென்ற தலைமகன் வாராது தாழ்ப்ப அதனால் ஆற்றாளாய தலைமகளைத் தோழி நோக்கி " நீ இறக்க ஏதவாயிற்றேயென்று வருந்தாதேகொள்; காதலர்