(து - ம்.) என்பது, தலைவன் பிரிதலானே வருந்திய தலைவியை நோக்கி நீ வருந்தாது வலிதிலே பொறுத்திருவென்ற தோழிக்கு நீ என்னைப் பொறுத்திரு என்கின்றனையே; துறைவனுடைய முயக்கம் எய்தாதவிடத்துக் குருகின் ஒலிக்கு உடைந்தும் இன்னும் உளனாயிராநின்றேனே; என்னுயிர் எவ்வளவு வன்மையுடையதென அழிந்து கூறா நிற்பது.
(இ - ம்.) இதனை, " கொடுமை ஒழுக்கம்..........................ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்" (தொல். கற். 6) என்னும் விதியினால் அமைத்துக் கொள்க.
| ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை |
| வீங்குமடற் குடம்பைப் பைதல்வெண் குருகு |
| நள்ளென் யாமத்து உயவுதோ றுருகி |
| அள்ளல் அன்னஎன் உள்ளமொடு உள்ளுடைந்து |
5 | உளனே வாழி தோழி வளைநீர்க் |
| கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமில் பரதவர் |
| வாங்குவிசைத் தூண்டில் ஊங்கூங் காகி |
| வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர் |
| நீல்நிற விசும்பின் மீனொடு புரையப் |
10 | பைபய இமைக்குந் துறைவன் |
| மெய்தோய் முயக்கங் காணா ஊங்கே. |