(து - ம்.) என்பது, களவுப் புணர்ச்சியில் வரைவு நீட்டித்த தலைமகன் மறைவாகிய .ஓரிடத்தில் வந்திருப்பதையறிந்த தோழியானவள் அவன் கேட்டு விரைய வரையுமாற்றானே தலைவியை நோக்கிக் "கானலிடத்தும் நம் கணவனோடு உற்ற நம்மில் ஒருவரையொருவர் பிரிந்தால் பிழைப்பது அரிதென்னாமல் அலரெழுந்து அவரை இங்கு வாராவண்ணம் தடுத்ததுமன்றி அதுகாரணமாக இவ்வூர் வருந்துதலையுஞ் செய்கின்றது ; இஃதென்ன கொடுமை"யென நொந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ""களனும் பொழுதும்............................அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்"" (தொல். கள. 23) என்னும் விதியின் கண் அமைத்துக் கொள்க.
| முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்த் |
| தடந்தாள் தாழை முள்ளுடை நெடுந்தோட்டு |
| அகமடற் பொதுளிய முகைமுதிர் வான்பூங் |
| கோடுவார்ந் தன்ன வெண்பூத் தாழை |
5 | எறிதிரை உதைத்தலிற் பொங்கித் தாதுசோர்பு |
| சிறுகுடிப் பாக்கத்து மறுகுபுலா மறுக்கும் |
| மணங்கமழ் கானல் இயைந்தநங் கேண்மை |
| ஒருநாள் பிரியினும் உய்வரிது என்னாது |
| கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச் |
10 | செய்ததன் தப்பல் அன்றியும் |
| உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே. |